கரூர்: பருத்தித்துணியால் நெய்யப்பட்ட 133 பக்கங்கள் கொண்ட திருக்குறள் புத்தகத்தை உருவாக்கிச் சாதனை படைத்துள்ளார் கரூரைச் சேர்ந்த விசைத்தறி நெசவாளர் பிரபு.
கரூர் மாவட்டம் இளவனூர் பகுதியைச் சேர்ந்த அவர், பல தலைமுறைகளாக நெசவுத் தொழிலில் ஈடுபட்டுவரும் குடும்பத்தைச் சேர்ந்தவர். தனது பரம்பரைத் தொழிலில் ஏதேனும் சாதனை புரிய விரும்பிய பிரபு, தூய பருத்தி நூலைக் கொண்டு திருக்குறள் நூலை உருவாக்கியுள்ளார். அவருக்கு ஏற்கெனவே பருத்தித் துணியில் திருவள்ளுவர் உருவத்தை நெய்த அனுபவம் உண்டு.
இந்நிலையில், திருக்குறளை முழுமையாகப் பருத்தி துணி கொண்டு உருவாக்கும் யோசனை தோன்றியுள்ளது. இதற்காகச் சந்தையில் துணி வாங்காமல் தமது விசைத்தறியிலேயே தூய பருத்தி நூலைப் பயன்படுத்தி சிறப்புத் துணியை நெய்துள்ளார்.
அந்தத் துணியை வெட்டி, ‘மேனுவல் ஸ்கிரீன்’ என்ற அச்சுமுறையில் அனைத்து குறள்களையும் நேர்த்தியாக அச்சிட்டு ஒவ்வொரு பக்கத்திலும் ஓர் அதிகாரத்துக்குப் பத்து குறட்பாக்கள் வீதம் இடம்பெறச் செய்து, இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த 133 பக்கக் கைவினைப் புத்தகத்தை உருவாக்க நான்கு மாதக் கடும் உழைப்பும் ஒரு புத்தகத்திற்கு ரூ.25,000 செலவும் ஆகியுள்ளது. இதுவரை மூன்று புத்தகங்கள் முழுமையாக உருவான நிலையில், மொத்தம் பத்து புத்தகங்களுக்குத் திட்டமிட்டுள்ளார் பிரபு.
சந்தையில் நல்ல வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில், தயாரிப்புச் செலவைக் குறைக்க முடியும் என நம்பிக்கையுடன் கூறும் அவர், இப்புதுமைப் படைப்பைத் தமிழக முதல்வருக்குப் பரிசாக அளிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
