தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருக்குறள் வாழ்க்கைக்கான வாளும் கேடயமும் போன்றது: மு.க.ஸ்டாலின்

2 mins read
5e1d8fcf-2083-48b4-90fd-98c632ce7621
திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். - படம்: ஊடகம்

குமரி: திருவள்ளுவர் வெறும் சிலையல்ல என்றும் திருக்குறள் வெறும் நூல் அல்ல என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருக்குறள் வாழ்க்கைக்கான வாளும் கேடயமும் போன்றது என்றும் அது அனைவரையும் காக்கும் என்றும் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா சிறப்பு மலரை வெளியிட்டு உரையாற்றியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கன்னியாகுமரியில் செவ்வாய்க்கிழமை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

திருக்குறள், காவி சாயம் பூச நினைக்கிற தீய எண்ணங்களையும் விரட்டியடிக்கும் என்று குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், திருக்குறள் தொடர்பான சில புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

திருக்குறள் ஓலைச்சுவடிகள், புத்தகங்கள், மின்நூல்கள், திருவள்ளுவர் சிலை பற்றிய புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்த அவர், திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா வளைவுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத் தொகை வழங்கினார்.

திருவள்ளுவர், தமிழர்களுக்கு இருக்கக்கூடிய உலக அடையாளம் என்றும் திருக்குறள் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம் என்றும் குறிப்பிட்ட அவர், அதனால்தான் சிலை வெள்ளி விழாவைக் கொண்டு வருவதாகவும் இனியும் கொண்டாடிக் கொண்டே இருப்போம் என்றும் தெரிவித்தார்.

“7,000 டன் எடை கொண்ட இந்தச் சிலையில், 3,681 கற்கள் உள்ளன. இத்தனைக் கற்களைக் கொண்டு ஒரு சிலையை உருவாக்கலாம். ஆனால், அதை ஒரு பாறையில் தூக்கி நிறுத்தி வைத்திருப்பது தான் இந்தச் சிலையின் பெருமை,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

“ஒவ்வொரு மாவட்டத்துக்கும் திருக்குறளில் ஆர்வமும் புலமையும் மிக்க ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்குப் பயிற்சி வழங்கி மாவட்டம்தோறும் தொடர் பயிலரங்குகள், பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ‘திருக்குறள் திருப்பணிகள்’ தொடர்ந்து நடைபெற திட்டம் வகுக்கப்படும்.

“ஆண்டுக்கு 133 உயர் கல்வி நிறுவனங்களில், திருக்குறள் தொடர்பான கலை இலக்கிய அறிவுசார் போட்டிகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்த திட்டமிடப்படும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் கடைசி வாரம் ‘குறள் வாரம்’ கொண்டாடப்படும்.

“தமிழ்த் திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான திருக்குறள் மாணவர் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படும். திருக்குறளும் உரையும் அரசு அலுவலகங்களில் எழுதப்படுவது போல, தனியார் நிறுவனங்களிலும் எழுதுவதற்கு, ஊக்குவிக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்,” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்