தென்னிந்திய மாநிலங்களிலும் மது ஒழிப்பு மாநாடு நடத்த திருமா திட்டம்

தென்னிந்திய மாநிலங்களிலும் மது ஒழிப்பு மாநாடு நடத்த திருமா திட்டம்

படம்: ஊடகம்

08 Oct 2024 - 6:55 pm

1 mins read

சென்னை: தமிழகத்தில் நடத்தப்பட்டதுபோல் இதர தென்னிந்திய மாநிலங்களிலும் மது ஒழிப்பு மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரள மாநிலங்களிலும் மது, போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டை நடத்த திட்டமிட்டு வருவதாகவும் இதுகுறித்து விவாதிக்க வரும் 10ஆம் தேதி விசிக உயர்நிலைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

“மறைந்த தலைவர் ராஜாஜியின் மதுவிலக்கு தொடர்பான நிலைப்பாட்டில் எங்களுக்கும் உடன்பாடு உள்ளது. அவரது மதுவிலக்கு சட்டம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இந்திய அளவில் முதன்முதலாக மதுவிலக்கு சட்டத்தைக் கொண்டுவந்து நடைமுறைப்படுத்தியவர் ராஜாஜி என்பது வரலாற்று உண்மை.

“இதையொட்டியே விசிக சார்பில் மது ஒழிப்பு மகளிர் மாநாடு நடத்தப்பட்டது. ஆனால், சில தரப்பினர் இதை ஊதிப் பெரிதாக்கி விசிக பற்றி எதிர்மறையாக விமர்சனம் செய்கின்றனர்.

“ஆனால், இதுபோன்ற விமர்சனங்களை நாங்கள் பொருட்படுத்துவதில்லை,” என்றார் திருமாவளவன்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுநல நோக்கத்துடன் மது ஒழிப்பு மாநாட்டை நடத்தியது என்றும் இதில் அரசியலைக் கலக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் திருமாவளவன் செய்தியாளர்களிடம் மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்