மதுரை: மது ஒழிப்பு மாநாடு தொடர்பாக தாம் எந்தவிதக் கணக்குகளையும் போடவில்லை என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியலில் அடியெடுத்து வைத்த காலத்தில் இருந்து மது ஒழிப்பு பற்றி பேசி வருவதாகக் குறிப்பிட்டார்.
“அதிகாரம் எளிய மக்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் எப்போதும் எங்கள் கோரிக்கை. எனக்கு உண்மையில் அரசாங்கத்தில் பங்கு வேண்டும் என நினைத்திருந்தால் தேர்தல் நேரத்தில் கேட்டிருப்பேன். இப்போது கேட்க வேண்டிய அவசியமில்லை.
“தேர்தல் அரசியலோடு இதை முடிச்சுப் போடக்கூடாது. காவிரி நீர், ஈழத்தமிழர் விவகாரங்களில் அனைவரும் இணைவதுபோல் மது ஒழிப்பிலும் இணையலாம்.
“பாமகவுடன் எங்களுக்கு கசப்பான அனுபவங்கள் இருப்பதால் அவர்களை அழைக்கவில்லை. இப்போதும் நாங்கள் திமுக கூட்டணியில் உள்ளோம். கூட்டணியில் தொடர்கிறோம். எவ்வித பிரச்சினையும் இல்லை,” என்றார் திருமாவளவன்.
அண்மையில் ஆட்சி அதிகாரத்தில் விசிகவுக்குப் பங்கு வேண்டும் என்று திருமாவளவன் பேசுவது போன்ற காணொளி ஒன்று வெளியானது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினரே இந்தக் காணொளியை வெளியிட்டதால் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது.
எனினும், தாம் பல ஆண்டுகளுக்கு முன்பு பேசிய காணொளியை மீண்டும் வெளியிட்டுள்ளதாக விளக்கம் அளித்தார் திருமாவளவன்.