தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திமுகவுடனான உறவில் விரிசல் இல்லை: தொல். திருமாவளவன்

2 mins read
e8e3e485-dca8-4a75-a094-3515fd8b1010
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமது கட்சி நிர்வாகிகளுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்தார் விசிக தலைவர் தொல். திருமாவளவன். - காணொளிப்படம்: ஏஎன்ஐ

சென்னை: தமிழ்நாட்டை ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்துடனான உறவில் எந்த விரிசலும் நெருடலும் இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று திருமாவளவன் பேசியதாக அண்மையில் ஒரு காணொளி வெளியாகி, பரபரப்பைக் கிளப்பியது.

இந்நிலையில், திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினை திங்கட்கிழமை (செப்டம்பர் 16) திருமாவளவன் தமது கட்சி நிர்வாகிகளுடன் சந்தித்தார்.

அப்போது, அக்டோபர் 2ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெறவுள்ள ‘மது, போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு’ தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றை அவர் முதல்வரிடம் கொடுத்தார்.

முதலாவது கோரிக்கை, தமிழகத்தில் அரசு நடத்தி வரும் ‘டாஸ்மாக்’ மதுக்கடைகளின் விற்பனை இலக்கை படிப்படியாகக் குறைக்க வேண்டும்.

இந்திய அளவில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அனைத்து மாநில அரசுகளும் முன்வர வேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கை.

அதனைத் தொடர்ந்து, “திமுகவின் கொள்கைதான் மதுவிலக்குக் கொள்கை. மதுவிலக்கு தமிழ்நாட்டில் நடப்பிற்கு வரவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. நிர்வாகச் சிக்கலைக் கருத்தில் கொண்டு அதனை படிப்படியாக எவ்வாறு நிறைவேற்ற முடியுமோ அவ்வாறு செய்வோம்,” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

தேசிய அளவில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில் விசிகவோடு சேர்ந்து திமுகவும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் என்று திரு ஸ்டாலின் உறுதியளித்தார்.

அக்டோபர் 2 மாநாட்டில் திமுக சார்பில் மூத்த தலைவர்களான ஆர்.எஸ். பாரதியும் டி.கே.எஸ். இளங்கோவனும் பங்கேற்பர் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

முதல்வரைச் சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்பது 1999 முதலே நான் பேசி வருகிறேன். அதனைத் தொடர்ந்து முன்வைப்போம். அவ்வாறு நான் பேசியது குறித்து முதல்வர் எதுவும் கேட்கவில்லை,” என்று சொன்னார்.

மேலும், தேர்தலுக்கும் இப்போது தாங்கள் நடத்தவிருக்கும் மாநாட்டிற்கும் எந்தத் தொடர்புமில்லை என்ற அவர், “கணவரை இழந்த ஆயிரக்கணக்கான பெண்களின் கோரிக்கையை முன்னிறுத்தியே இம்மாநாட்டை நாங்கள் நடத்துகிறோம். இதனைத் தேர்தல் அரசியலோடு இணைத்துப் பார்த்து, திசைதிருப்ப வேண்டாம்,” என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்