சென்னை: கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் இவ்வாண்டு டிசம்பர் 31, அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆகிய இரு நாள்களிலும் நடைபெறும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின் பெருமையைப் பறைசாற்றும் வகையில், கன்னியாகுமரி கடல் நடுவே 133 அடி உயரத்தில் அவருக்குச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
கடந்த 2000ஆவது ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி அச்சிலையைத் திறந்துவைத்தார்.
இந்நிலையில், அச்சிலை திறக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, அதன் வெள்ளிவிழா கொண்டாடப்படும் என்று திரு ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதன் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள காணொளிப் பதிவில், “கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைத்து கால் நூற்றாண்டு ஆகிறது. அந்த வகையில் வெள்ளி விழா காண்கிறது வள்ளுவர் சிலை. இதனைக் கொண்டாடும் விதமாக, வரும் டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய இரு நாள்களில் வள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகளை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சாதி, மத பேதங்களைக் கடந்து ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று கூறியவர் வள்ளுவர். அவர் எல்லாருக்கும் பொதுவான தமிழர்களின் அடையாளம்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மாணவ, மாணவிகளுக்குப் பல்வேறு போட்டிகளும் திருக்குறளின் பெருமைகளை உணர்த்தும் வகையில் மாவட்டந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

