சென்னை: வட இந்தியாவில் நிகழ்வதுபோல் தமிழகத்திலும் கொலைச் சம்பவங்கள் அதிகரித்துவிட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய அளவில் ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் மட்டுமல்லாமல் வட, மேற்கு மாவட்டங்களிலும்கூட ஆணவக் கொலைகள் பரவி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக சாதியவாத சக்திகளும் மதவாத சக்திகளும் சாதி பெருமிதத்தை அரசியலாக உயர்த்திப் பிடிக்கிறார்கள்.
“சாதிப் பெருமிதத்தின் அடிப்படையில் இதுபோன்ற கொலைகளை ஊக்கப்படுத்தி வருகின்றனர். வட இந்திய மாநிலங்களில்தான் இதுபோன்ற படுகொலைகள் நடக்கும். அது தமிழகத்தில் தற்போது அதிகரித்துள்ளது.
“இதனைத் தடுப்பதற்கு தேசிய அளவில் ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று அனைத்து மாநிலங்களில் இருந்தும் ஜனநாயகக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
“மத்திய அரசும் இந்தக் கோரிக்கையை பொருட்படுத்தவில்லை. தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளும் கண்டுகொள்ளவில்லை. மத்திய அரசு, ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டத்தை இயற்றலாமா எனக் கேட்டு கடிதம் எழுதியுள்ளது. ஆனால், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கருத்து சொல்லாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
“உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசுகள் செய்ய வேண்டிய கடமைகள் என்று ஆணவக் கொலை தொடர்பாக சில வழிகாட்டுதல்களை கொடுத்துள்ளார்கள். அந்த வழிகாட்டுதல்களைக்கூட தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் பின்பற்றவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது,” என்றார் திருமாவளவன்.