சென்னை: திருவண்ணாமலையில் நடைபெறவிருக்கும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் போது, மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீபத்தை தரிசிப்பதற்கு பக்தர்கள் யாரும் மலை ஏறி செல்ல அனுமதி கிடையாது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகிகள் உள்ளிட்ட 300 பேருக்கு மட்டுமே மலையேறி சென்று மகாதீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்டதையடுத்து தடை விதிப்பதாகவும் ஆனால் மகாதீபம் விழா நடைபெறும் என்றும் அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து, அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, பாதுகாப்புக் காரணங்களுக்காக அதிகமானோரை மலையேற அனுமதிப்பது ஆபத்து என்பதால் மகாதீபம் ஏற்றுவதற்கு முக்கியமானவர்களை மட்டுமே அனுமதிப்பதாகக் கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கிய திருக்கார்த்திகைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வு டிசம்பர் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது. திருக்கார்த்திகை தீபத்தன்று மாலை 6 மணிக்கு கோவிலின் பின்புறம் அமைந்துள்ள 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலை மீது மகாதீபம் ஏற்றப்படும். அந்த மகாதீபத்தைக் கண்டு வழிபட ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வர்.
மகாதீபத்தைக் காண்பதற்கு 11,500 பேர் இணையம் மூலம் பதிவுசெய்து அனுமதி பெற்றுள்ளனர். ஆனால், மலையின் உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை தரிசிப்பதற்கு மலையேறிச் செல்ல விரும்பி விண்ணப்பித்தவர்களில் 2,000 பேருக்கு மட்டும் அனுமதி வழங்க கோயில் நிர்வாகம் முடிவு செய்திருந்தது.
இந்நிலையில், திருவண்ணாமலையில் டிசம்பர் 1ஆம் தேதி பெய்த பெருமழையால் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதில் 7 பேர் உயிரிழந்தனர்.
முக்கியமாக, மலை உச்சியில் மகாதீபம் ஏற்றுவதற்கான கொப்பரை எடுத்துச் செல்லும் பாதையிலும், மலை உச்சியில் கொப்பரை வைக்கும் இடத்தில் மண்சரிவு ஏற்பட்டதால் அதிகாரிகள் மலையில் ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் அதிகமானோர் மலையில் ஏறுவது ஆபத்தானது என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.