சென்னை: திருவொற்றியூர் விக்டோரியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி வாயுக்கசிவு ஏற்பட்டது.
அதனால் மயக்கமடைந்த 39 மாணவிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
வாயுக்கசிவுக்கான காரணம் குறித்துக் கண்டறிய தேசிய பேரிடர் முகவையும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் காற்றுத்தரப் பரிசோதனை மேற்கொண்டன. இருந்தும் வாயுக்கசிவுக்கான காரணம் கண்டறியப்படவில்லை.
அச்சம்பவத்தைத் தொடர்ந்து, 10 நாள்கள் விடுமுறைக்குப்பின் அப்பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது பள்ளியின் பல பகுதிகளில் மீண்டும் வாயு நெடி உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதில் சில மாணவிகள் மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.
இதற்கிடையே மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக காற்றின் தரத்தை பரிசோதிக்கும் மொபைல் வாகனம் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்தபடியே 500 மீட்டர் சுற்றளவுக்கு காற்றை உறிஞ்சி அதிலுள்ள நச்சுத்தன்மை குறித்து ஆராயும் பணிகள் நடைபெறுகின்றன.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட ஆய்வில் ஆபத்தான வாயுக்களோ, வேறு காரணிகளோ கண்டறியப்படவில்லை. இதனால் அடுத்தகட்டமாக இத்துறை சார்ந்த ஆராய்ச்சியாளர்கள், வல்லுநர்களின் உதவியை நாட அவர்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட ஆய்வு குறித்த அறிக்கையில், பள்ளிக்கு அருகாமையில் எந்த தொழிற்சாலைகளும் இல்லை. பள்ளிக்கூடத்தின் வேதியியல் ஆய்வகத்தில் முன்னதாகச் செய்முறைப் பயிற்சி நடத்தப்பட்டது. அதன்பின் செய்முறைக்குப் பயன்படுத்தப்பட்ட வேதிப்புட்டிகள் முறையாகச் சுத்தம் செய்யப்படாதது கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும் அந்தச் சம்பவத்தால் நச்சு வாயுக்கள் அங்கிருந்து வெளியாகவில்லை என்றும் அந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

