கோவை: பெங்களூரில் இருந்து எர்ணாகுளத்துக்கு தமிழகம் வழியே இயக்கப்படும் ரயிலின் பெட்டியில், தமிழ்ப் பெயர்ப் பலகை வைக்க முயன்ற திராவிடர் கழகத்தினர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
எர்ணாகுளம் ரயில் புதன்கிழமை (ஜூன் 25) பிற்பகல் கோவை ரயில் நிலையத்துக்கு வந்தபோது, ரயில் பெட்டிகளில் தமிழில் பெயர்ப் பலகைகளை வைக்க முற்பட்டனர். திட்டமிட்டு தமிழையும் தமிழ்நாட்டு மக்களையும் பாஜக அரசு புறக்கணிப்பதாக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
அவர்களைத் தடுத்த காவல்துறையினர் 20க்கும் மேற்பட்டோரைக் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
இதனால் கோவை ரயில் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரில் இருந்து புறப்படும் இந்த ரயில் ஓசூர், சேலம், ஈரோடு, கோவை என 300 கிலோ மீட்டருக்கு மேல் தமிழகம் வழியாகப் பயணம் செய்து பாலக்காடு வழியாக எர்ணாகுளம் செல்கிறது.
ஆனால், இந்த ரயிலின் பெட்டிகளில் கன்னடம், இந்தி, ஆங்கில மொழிகளில் பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் அதிகத் தொலைவு பயணம் செய்யும் ரயிலில், தமிழ் மொழிப் பலகை இல்லாததால் தமிழைப் புறக்கணிப்பு செய்வதாகக் குற்றம்சாட்டி திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

