தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருப்பரங்குன்றம் நோக்கிச் சென்ற ஆயிரக்கணக்கான பாஜகவினர் கைது

2 mins read
17e79c15-0567-48f2-8649-2a639dad41a7
மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய காவல்துறையினர், பாஜகவினரைத் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. - படம்: ஊடகம்

திண்டுக்கல்: திருப்பரங்குன்றம் நோக்கிப் புறப்பட்ட ஆயிரக்கணக்கான பாஜகவினர் தமிழகம் முழுவதும் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

‘குன்றம் காக்க, குமரனைக் காக்க’ என்ற முழக்கத்துடன் அவர்கள் பாத யாத்திரையயாகச் செல்ல முற்பட்டபோது, அனைவரும் கைதானதாக இந்து தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்மையில் ராமநாதபுரம் தொகுதி எம்பி நவாஸ்கனி, தனது ஆதரவாளர்களுடன் திருப்பரங்குன்றம் மலைக்குச் சென்று அங்கு அசைவ உணவு உட்கொண்டது பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது. இதற்கு இந்து சமய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலையிலுள்ள ஒரு தர்காவில் ஆடு, கோழிகளைப் பலியிட இஸ்லாமிய அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் தெரிவித்தன.

பிப்ரவரி 4ஆம் தேதியன்று பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, ‘குன்றம் காக்க, குமரனைக் காக்க’ என்ற முழக்கத்துடன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாஜகவினர் ஏராளமானோர் செவ்வாய்க்கிழமமை (பிப்ரவரி 4ஆம் தேதி) திருப்பரங்குன்றம் பாத யாத்திரையாகச் செல்ல முற்பட்டனர்.

எனினும், மதுரை உட்பட பல்வேறு பகுதிகளில் காவல்துறை இதற்கு அனுமதி அளிக்கவில்லை. மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய காவல்துறையினர், பாஜகவினரைத் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, தடையை மீறி பாத யாத்திரை செல்ல முற்பட்ட 10 பெண்கள் உட்பட பாஜகவினர் 100 பேரைக், காவல்துறையினர் கைது செய்தனர்.

இதேபோல், தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ஏராளமான பாஜகவினர் கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

இதற்கிடையே, காவல்துறையின் நடவடிக்கைக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது போல் காவல்துறை செயல்படுவதாக அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

இந்நிலையில், மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் இதுதொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், செவ்வாய்க்கிழமை மாலை போராட்டம் நடத்த பாஜகவுக்கு அனுமதி அளித்தனர்.

குறிப்புச் சொற்கள்