மதுரை: தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதையடுத்து, அவருக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கிரானைட் குவாரி மூலர் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருப்பதை அம்பலப்படுத்தியவர் சகாயம்.
மதுரை, நாமக்கல் மாவட்டங்களில் ஆட்சியராகவும் தமிழகத்தின் பல துறைகளில் உயர் அதிகாரியாகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
தனது விசாரணை முடிவில், தமிழக கிரானைட் குவாரிகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பது தெரியவந்ததாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் சகாயம் குறிப்பிட்டிருந்தார்.
இதனால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
கிரானைட் முறைகேடு வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், சகாயம் நேரில் முன்னிலையாகவில்லை. அவரது விசாரணையில் வழக்கறிஞர் கடிதம் ஒன்றை நீதிபதியிடம் அளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அதில், தமக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை மாநில அரசு திடீரென திரும்பப் பெற்றுவிட்டதாக சகாயம் குறிப்பிட்டுள்ளார்.
“என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது தவறானது, முறையற்றது.
“கிரானைட் குவாரி முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் கடந்த கால செயல்பாடுகளை கருத்தில் கொள்ளாமல் எனக்கு மாநில அரசு கொடுத்த பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது,” என்று சகாயம் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நீதிமன்றத்தில் எவ்வித பயமுமின்றி சாட்சியங்களை அளிப்பதற்கு ஏதுவாக, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழக காவல்துறை உறுதி அளித்துள்ளது.

