சென்னை: சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்ற மூன்று லட்சம் அரசு ஊழியர்கள் தங்களது அஞ்சல் வாக்குகளைச் செலுத்தியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்களுடைய வாக்குகளைச் செலுத்த உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆணையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தேர்தல் நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக வாக்குச்சாவடி அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்குப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
வாக்குப்பதிவு அலுவலர்களின் கடமைகள், பணிகள், பொறுப்புகள் தொடர்பான தலைப்புகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள்வது குறித்த நேரடிப் பயிற்சி அளிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாக்குப்பதிவு அலுவலர்கள் வெவ்வேறு இடங்களில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்பதால் அவர்கள் தங்களுடைய வாக்குகளைச் செலுத்த அஞ்சல் வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்படுகிறது.
இம்முறை ஏறக்குறைய மூன்று லட்சம் வாக்குப்பதிவு அலுவலர்கள் அஞ்சல்வழி வாக்களிக்க விண்ணப்பித்திருந்தனர். இவர்கள் அனைவரும், பயிற்சி மையங்களிலேயே தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்தனர்.
கடந்தகாலத் தேர்தலில் தேர்தல் பணியாளர்கள் அஞ்சல் வாக்குச்சீட்டைத் தங்கள் வீட்டுக்கு எடுத்துச்சென்று, பின்னர் அஞ்சல் மூலம் அனுப்பி வைப்பர்.
இப்போது அந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளதாகத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
தடையற்ற மின்சாரம்
சட்டமன்றத் தேர்தலின்போது தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவன்றும் வாக்குகள் எண்ணப்படும் நாளன்றும் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழக மின்வாரியத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தனது அலுவலர்களுக்கு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் இரவு நேரத்தில் அரசியல் கட்சியினர் செயற்கையாக மின்தடை ஏற்படுத்தி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ததாகக் கடந்த காலங்களில் பரவலாகப் புகார்கள் எழுந்தன. அதேபோல், இப்போதும் நடந்துவிடக் கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் முனைப்பாக உள்ளது.
தேர்தலை நியாயமாகவும் அமைதியாகவும் நடத்த பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ள தேர்தல் ஆணையம், சீரான மின் விநியோகம் மூலம் முறைகேடுகளைத் தடுக்க முடியும் என நம்புகிறது.
இதையடுத்து, இரவு நேரங்களில் மின்தடை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அனைத்துப் பிரிவு அதிகாரிகளுக்கும் தமிழக மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வாக்குப்பதிவு, வாக்குகள் எண்ணும் நாளன்று தடையற்ற மின்சாரம் வழங்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
குறிப்பாக, கோடைக்காலத்தில் மின் விநியோகத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்க்க, இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுவதைத் தடுக்க, அலுவலர்கள் நள்ளிரவு வரை பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

