விருதுநகர்: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் ஏப்ரல் 26ஆம் தேதி சிவகாசியில் நிகழ்ந்தது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டியில் தனியார் பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு தயாரிப்பு அறைகளில் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர்.
சனிக்கிழமையன்று இந்த ஊழியர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஆலையில் வைக்கப்பட்டிருந்த மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து வெடிபொருள்கள் அனைத்தும் ஒரே சமயத்தில் வெடித்துச் சிதறின. இந்தக் கோர விபத்தில் சிக்கி மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி மாண்டனர். ஐந்து பேர் படுகாயமடைந்த நிலையில், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.