திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வழிபாட்டிற்கு நேரக் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண வழிபாட்டு வழியில் பக்தர்கள் மாலை 6.30 மணிவரைக்கும், பொது தரிசன வரிசையில் இரவு 7 மணிவரைக்கும் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
அதிகாலை 4.30 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு, இரவு 9 மணிவரை பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்படுவது வழக்கம். இதில் 100 ரூபாய் கட்டண வரிசை, பொது வரிசை ஆகிய வழிகளில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இரவு 9 மணிவரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால், கோவில் நடையை அடைப்பதற்குத் தாமதம் ஏற்பட்டு இரவு 12 மணிவரை ஆகிவிடுகிறது.
அதனால், கோவில் நிர்வாகம் தரப்பில் வழிபாட்டு நேரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கூட்டம் அதிகமாக இருக்கும் சிறப்பு, விடுமுறை நாள்களில் வரிசையை முறைப்படுத்த மட்டுமே நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்றும் மற்ற நாள்களில் கோவிலில் வழிபாட்டு நேரம் குறைக்கப்படவில்லை என்றும் கோவில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் பொது வரிசை, ரூ.100 கட்டண வரிசை, மூத்த குடிமக்கள் வரிசைமூலம் அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் இறை வழிபாடு செய்து வருகின்றனர்.

