மதுரை: திருப்பரங்குன்றத்தில் மலைக்குச் செல்லவிருந்த பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிமை காவல்துறை கைது செய்தது.
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாஜக தொண்டர்கள் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து அங்கு கூடிய பாஜகவினரைக் கட்டுப்படுத்த முயன்ற காவல்துறைக்கும் பாஜகவுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதையடுத்து பாஜகவைச் சேர்ந்த மேலும் இருவரை காவல்துறை கைதுசெய்தது.
அப்போது பணியிலிருந்த உதவி ஆணையர் சூரக்குமாரிடம், மலைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என பாஜகவினர் கோரிக்கை விடுத்தனர். அப்போது, வேலூர் இப்ராகிம், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனியின் புகைப்படத்தின் மீது காலணியால் அடித்தார். அதையடுத்து இப்ராகிமைக் காவலர்கள் கைது செய்தனர்.
வேலூர் இப்ராகிமை விடுவிக்கக்கோரியும் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய வாசலில் அமர்ந்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவலர்கள் தடுத்துநிறுத்தி கலைந்துபோகச் செய்தனர். இதனால் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, பாஜகவின் 9 ஆண்டுகள் சாதனை குறித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்குவதற்காக குடியாத்தம் சென்ற பாஜக தேசிய சிறுபான்மையினர் அணி செயலாளர் வேலூர் இப்ராகிம் குடியாத்தத்தில் கைது செய்யப்பட்டார்.
தரணம்பேட்டையில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் வேலூர் இப்ராகிம் வருவதைக் கண்டித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.