தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருப்பரங்குன்றம் சர்ச்சை: மலையேறிய எச்.ராஜா, இந்து முன்னணி போராட்ட அறிவிப்பு

3 mins read
f59be708-f952-43e4-8d94-734c22bb673d
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் இந்துக்களின் புனிதத் தலங்களில் ஒன்று.  - படம்: இணையம்

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சி தர்கா தொடர்பாக சர்ச்சை நீடித்து வரும் நிலையில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தலைமையில் 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் வியாழக்கிழமை (ஜனவரி 23) திடீரென மலையேறி காசி விஸ்வநாதரை தரிசனம் செய்தனர்.

உத்தரப்பிரதேசத்தில் அயோத்தி, காசி, மதுரா போல் தமிழகத்தில் திருப்பரங்குன்றம் இந்துக்களை ஒருங்கிணைக்கும் வழிபாட்டுத்தலமாக மாறும் என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை மீது ஏறிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையிலான பாஜகவினர், காசி விஸ்வநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் மலை மீது ஏறிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையிலான பாஜகவினர், காசி விஸ்வநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். - படம்: தமிழக ஊடகம்

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காசி விஸ்வநாதர் கோவில், சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா ஆகியவை உள்ளன. தர்காவில் சந்தனக் கூடு திருவிழாவை முன்னிட்டு ஆடு, கோழிகள் பலியிடப்படும். கடந்த வாரம் இதேபோல நடைபெற்ற நிகழ்வுக்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சை வெடித்தது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கந்தூரி வழிபாட்டுக்கு காவல்துறை தடை விதித்தது.

இதனால் தாங்கள் வழிபட அனுமதி மறுக்கப்படுகிறது எனக்கூறி, சில இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. ‘வழிபடத் தடையில்லை. உயிர்ப்பலி கொடுக்கதான் தடை’ என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பொருட்படுத்தாமல், ஜனவரி 18ஆம் தேதி ஆடு, கோழி வெட்டி சமபந்தி விருந்து கொடுக்க போவதாக கூறி, இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த சிலர் மலையேற முயன்றனர். அப்போது காவல்துறையினர் தடுத்ததால் தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து மலையை ஆக்கிரமிக்கும் நோக்கில் சில அமைப்புகள் செயல்பட்டு வருவதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டின.

மதுரை சிக்கந்தர் மலை தர்கா விவகாரம் தொடர்பாக  நேரில் சென்று கள ஆய்வு செய்தார் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி.
மதுரை மாநகர காவல் ஆணையரை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
மதுரை சிக்கந்தர் மலை தர்கா விவகாரம் தொடர்பாக நேரில் சென்று கள ஆய்வு செய்தார் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி. மதுரை மாநகர காவல் ஆணையரை சந்தித்துப் பேச்சு நடத்தினார். - படம்: தமிழக ஊடகம்

இந்த விவகாரம் தொடர்பாக திருப்பரங்குன்றம் சென்ற தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவருமான ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி தர்காவுக்கு சென்று ஆய்வு செய்தார்.

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அங்கு தர்காவும், காசி விஸ்வநாதர் ஆலயமும் உள்ளது. தர்காவிற்கு அனைத்து மதத்தினரும் சென்று வருகிறார்கள். விரைவில் அனைத்து தடைகளும் நீக்கப்பட்டு கடந்த காலங்களில் இருந்தது போன்று மக்கள் சிரமம் இன்றி தர்காவிற்கு சென்று வர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் அவர் எனத் தெரிவித்திருந்தார்.

அவருடன் வந்தவர்கள் பார்சலாக வாங்கி வந்த பிரியாணியை சாப்பிட்டனர். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பரங்குன்றம் கோவில் மலையில் அமர்ந்து நவாஸ்கனி அசைவ உணவு சாப்பிட்டதாக குற்றஞ்சாட்டி, மத்திய அமைச்சர் எல்.முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் இஸ்லாமிய அமைப்புகளை கண்டித்தும், தமிழக அரசு இஸ்லாமிய அமைப்புகளின் சதியை முறியடிக்க வலியுறுத்தியும், பிப்ரவரி 4ஆம் தேதி போராட்டம் நடத்தவுள்ளதாக இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

“முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் இந்துக்களின் புனிதத் தலங்களில் ஒன்று. தமிழ் மன்னர்கள் ஆட்சியில் இருந்து இன்றைய ஆட்சியாளர்கள் வரை நிர்வாக ரீதியான ஆவணங்களும் இது முருகன் வீற்றிருக்கும் புனித மலை என்பதற்கான ஆவணங்களும் பல உள்ளன. திருப்பரங்குன்றம் மலை முழுவதுமே திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்குச் சொந்தமானது என லண்டன் பிரிவியூ கவுன்சில் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சமணர் குகையில் பச்சை வண்ணம்

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள பழமையான சமணர் குகைத்தளத்தில் அடையாளம் தெரியாத சிலர் பச்சை வண்ணம் அடித்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள பழமையான சமணர் குகைத்தளத்தில் அடையாளம் தெரியாத சிலர் பச்சை வண்ணம் அடித்துள்ளனர். - படம்: தமிழக ஊடகம்

இந்த நிலையில் அங்குள்ள பழமையான சமணர் குகைத்தளத்தில் அடையாளம் தெரியாத சிலர் பச்சை நிறச் சாயம் அடித்து சேதப்படுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் மலையிலுள்ள சமணர் படுகை, மலைக்கு பின்புறம் கல்வெட்டு குகைகோயில் தொல்லியல் துறை வசம் உள்ளது.

கல்வெட்டைப் பாதுகாக்கக் கோரிக்கை

மலை மேல் செல்லும் பாதையில், பழனி ஆண்டவர் கோவில் அருகே உள்ள கல்வெட்டுகள்.
மலை மேல் செல்லும் பாதையில், பழனி ஆண்டவர் கோவில் அருகே உள்ள கல்வெட்டுகள். - படம்: தமிழக ஊடகம்

இதற்கிடையே, திருப்பரங்குன்றம் மலை மேல் செல்லும் பாதையில், பழனி ஆண்டவர் கோவில் அருகே உள்ள கல்வெட்டுகளைப் பாதுகாக்க கோரி, அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு பொதுச்செயலர் ராமலிங்கம், கோவில் நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளார்.

“மலைமேல் செல்லும் படிக்கட்டுகளின் துவக்க பகுதியின் இடதுபுறம் தமிழிலும், வலதுபுறம் ஆங்கிலத்திலும் கல்வெட்டுகள் உள்ளன. ஆங்கில கல்வெட்டில் உள்ள எழுத்துகள் சேதம் அடைந்து உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன், ரோடு சீரமைப்பு பணியின்போது கல்வெட்டின் பின்பகுதி எழுத்துக்கள் மறைக்கப்பட்டு விட்டன.

“திருப்பரங்குன்றம் மலை, முருகன் மலை தான் என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ள பல்வேறு ஆதாரங்களில் இந்த கல்வெட்டும் ஒன்று. எனவே இதை பாதுகாக்கவும், சீரமைக்கவும் உடனடியாக நடவடிக்கை தேவை,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்