மதுரை: திருப்பரங்குன்றம் சர்ச்சை தொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவை அவமதிப்பு செய்தது தொடர்பாக, புதன்கிழமை (டிசம்பர் 17) விசாரணை நடைபெற்றது.
அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் அதிகாரிகளிடம் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.
நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை மீறியது ஏன் என்று கேட்ட அவர், தமது உத்தரவை அதிகாரிகள் யாரும் மதிக்கவில்லை என்றார்.
இந்தச் செயல்பாட்டுக்கு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் உரிய பதிலை விரிவான அறிக்கையாக அளிக்க அவகாசம் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாமல் தவிர்க்க சட்டங்களைப் பயன்படுத்தியது ஏன் என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கேள்வி எழுப்பினார்.
இந்த வழக்கு விசாரணைக்கு ஆட்சியரும் அதிகாரிகளும் காணொளி மூலம் முன்னிலையாகினர்.
இதனிடையே, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றுவதற்கான சான்று உள்ளனவா என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்நிலையில், மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் கோவில் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர், அங்குள்ள தீபத் தூண் சமணர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டது என்றும் சமணர்கள் இரவில் தீபம் ஏற்றி அதன் வெளிச்சத்தில் அமர்ந்து விவாதிப்பர் என்றும் குறிப்பிட்டார். எனவே, அந்தத் தூணுக்கு இந்துக்கள் உரிமை கோர முடியாது என்றும் அவர் வாதிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், இக்கூற்றை மறுத்துள்ள தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம், சமணர்கள் இரவில் தீப வெளிச்சத்தில் அமர்ந்து பேசுவர் என்ற இந்தக் கருத்து முற்றிலும் தவறானது எனக் கூறியுள்ளார்.
“சமணர்கள் உயிர் கொல்லாமைக் கொள்கையை தீவிரமாகப் பின்பற்றினர். இருள் சூழும் முன்பே இரவு உணவை முடித்துக்கொள்ளும் வழக்கம் உள்ளவர்கள். விளக்கில் பூச்சி விழுந்து உயிர்பலி ஏற்படும் எனக் கருதி அவர்கள் தீபம் ஏற்றுவதே இல்லை,” என்றார் தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம்.

