திண்டுக்கல்: திருப்பதியில் லட்டு தயாரிப்பதற்காக நெய் விநியோகம் செய்த திண்டுக்கல்லைச் சோ்ந்த தனியாா் பால் பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான ‘ஏ. ஆர். டெய்ரி ஃபுட்ஸ்’ சில் மத்திய, மாநில உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.
திருப்பதியில் பக்தா்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் சோ்க்கப்பட்ட நெய், தரப் பரிசோதனை செய்யப்பட்டதில், அதில் விலங்குகள் கொழுப்பு, மீன் கொழுப்பு கலந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகின.
லட்டு பிரசாதத்துக்கான நெய் விநியோகம் செய்த நிறுவனங்களில் ‘ஏ.ஆர். டெய்ரி ஃபுட்ஸ்’ நிறுவனமும் ஒன்று. இதையடுத்து, அந்த நிறுவனத்தில் சோதனை நடத்திய அதிகாரிகள் பால், நெய் மாதிரிகளைச் சேகரித்தனர்.
‘ஏ. ஆர். டெய்ரி ஃபுட்ஸ்’ விளக்கம்
திருப்பதிக்கு நெய் வழங்கிய திண்டுக்கல்லைச் சோ்ந்த தனியாா் பால் பொருள்கள் தயாரிப்பு நிறுவனத்தின் தரக் கட்டுப்பாட்டுப் பணியாளா்கள் இந்தச் சர்ச்சை குறித்து விளக்கம் அளித்தனர்.
“திருப்பதி கோயில் நிர்வாகத்திற்குக் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இரு தவணைகளில் எங்கள் நிறுவனத்தின் சாா்பில் நெய் அனுப்பப்பட்டது. எங்களது நிறுவனத்தின் தயாரிப்பில் 0.5 விழுக்காடு மட்டுமே திருப்பதிக்கு அனுப்பப்பட்டது. தற்போது அங்கு நெய் அனுப்புவது கிடையாது. திருப்பதிக்கு அனுப்பிய நெய்யின் தரம் குறித்த ஆய்வு அறிக்கையின் தரவுகளும் எங்களிடம் உள்ளன,” என அவர்கள் கூறினர்.
மேலும், திருப்பதி கோயில் நிர்வாகத்திற்குப் பல நிறுவனங்களிலிருந்து நெய் அனுப்பப்படுகிறது. இதில், எங்கள் நிறுவனம் அனுப்பியது 0.1 விழுக்காடு கூட இருக்காது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தமிழக இனிப்புகளில் விலங்கு கொழுப்புகள் இல்லை: உணவுப் பாதுகாப்புத் துறை
தொடர்புடைய செய்திகள்
“மாட்டு எலும்புகளை உருக்கி, அதிலிருந்து தயாரிக்கப்படும் நெய்யை உணவுப் பொருள்களில் பயன்படுத்தக்கூடாது. விலங்குகளின் கொழுப்பு மூலம் தயாரிக்கப்பட்ட லட்டுகளின் சுவை, அசல் நெய்யில் செய்த லட்டின் சுவையிலிருந்து நிச்சயம் வேறுபட்டிருக்கும். அவற்றை நம்மால் சாப்பிட முடியாது. அதன் வாசனை, சாப்பிடும் முன்பே நமக்குத் தெரிந்துவிடும். மேலும், லட்டு போன்ற உணவுப் பொருட்களில் விலங்கு கொழுப்புகளைப் பயன்படுத்துவது என்பது மிகவும் சிரமமானது,” எனச் சென்னை உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், விலங்கு கொழுப்புகள் கலந்து தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளை உட்கொண்டால் ரத்தக் குழாய் அடைப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகரிப்பு, கண் பார்வை இழப்பு, நெஞ்சுவலி போன்றவை ஏற்படலாம். கலப்படம் கலந்த உணவுகளை உட்கொண்டால், நிச்சயம் உடல் உபாதைகள் ஏற்படும். இதை தடுக்க, தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்,” என்றார் அவர்.
“தமிழகத்தில் இதுவரை விலங்குகொழுப்பு கலந்த நெய்களில் இனிப்புகள் தயாரிக்கப்பட்டதாக எந்தப் புகார்களும் பெறப்படவில்லை. வழக்கமான முறைகளில்தான் இனிப்புகள் தயாரிக்கப்படுவது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. விலங்கு கொழுப்புகள் ஏதும் பயன்படுத்தப்படவில்லை,” எனத் தமிழக உணவுப் பாதுகாப்புத்துறை கூடுதல் ஆணையர் தேவ பார்த்தசாரதி கூறினார்.