பாலக்கோடு: கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.70க்கு விற்பனையான தக்காளியின் விலை தற்போது ரூ.18 ஆக குறைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 300 டன் அளவுக்குத் தக்காளி விற்பனைக்காக வருவதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
சந்தையில்15 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ.280க்கும், சில்லறையாக ஒரு கிலோ ரூ.18க்கும் விற்பனையாகிறது. தருமபுரி உழவர் சந்தையில் திங்கட்கிழமை (டிசம்பர் 16) ரூ.18க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, பெல்ரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.
அங்கிருந்து பாலக்கோடு சந்தைக்கு விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து வியாபாரிகள் தக்காளியை வாங்கி தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்புகின்றனர்.
பாலக்கோடு பகுதிகளில் பெய்த மழை காரணமாகத் தக்காளி விளைச்சல் அதிகமாக உள்ளது. தக்காளி வரத்தும் அதிகரித்துள்ளது.
இதனால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது குறித்து விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பண்டிகை, சுபமுகூர்த்த தினங்கள் இல்லாததாலும் விலை சரிந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.