மதுரை: மதுரையில் இடைவிடாது பெய்த கனமழையால் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின.
நகரின் பல இடங்களில் வாய்க்கால்களின் கொள் அளவுக்கும் அதிகமான மழைநீர் நிரம்பியதால் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து மக்கள் வெகுவாகப் பாதிப்படைந்தனர்.
மதுரை நகரில் இந்திய நேரப்படி அக்டோபர் 25ஆம் தேதியன்று பிற்பகல் 2 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது.
சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
மாலை நேரத்தில் பள்ளி மாணவர்களும் ஊழியர்களும் வீடு திரும்ப முடியாமல் தவித்தனர்.
பல இடங்களில் போக்குவரத்து விளக்குகள் பழுதடைந்தன.
புதூர் பேருந்து நிலையம் அருகே காய்கறி சந்தை, நேத்ராவதி மருத்துவமனை முன் அழகர்கோவில் சாலையில் வெள்ளம் மோசமாக இருந்தது.
ஒரே நேரத்தில், எதிர்பாராத அளவுக்கு கனமழை பெய்ததால் அனைத்துத்துறை அதிகாரிகளும் செய்வதறியாமல் திகைத்தாகத் தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டது.
தொடர்புடைய செய்திகள்
குடியிருப்புகளில் மழைநீர் புகுந்துவிட்டதாக மாநகராட்சி நிர்வாகத்துக்குப் பல தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டே இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ரயில் பாலம், சாலைப் பாலம், வைகை ஆற்றுப் பாலங்களைக் கண்காணித்து, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் சாலைகளில் போக்குவரத்தைத் தடை செய்ய காவல்துறையினரின் உதவி நாடப்பட்டது.
மதுரை மாநகராட்சியும் பொதுப்பணித் துறையும் சேர்ந்து போக்குவரத்தைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டன.
மாலை 6 மணிக்குப் பிறகு சாலைப் போக்குவரத்து ஓரளவு சீரடைந்ததாக அதிகாரிகள் கூறினர்.
வரலாற்றில் இல்லாத அளவுக்கு மழை
மதுரையைப் பொறுத்தவரை, வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக கனமழை பெய்து வருகிறது என்கிறார் தென்காசி வெதர்மேன்.
மதுரை மழையின் வரலாற்றை திருப்பிப் பார்க்கும் போது, இந்த அக்டோபர் மாதத்தில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மதுரை நகரைப் பொறுத்தவரை, கடந்த 1955ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி 115 மிமீ மழை பதிவாகியுள்ளது.
அதன் பின்னர் தற்போது 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அக்டோபர் மாதத்தில் 100 மிமீக்கு மேல் மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக, கடந்த அக்டோபர் 13ஆம் தேதி மதுரையில் ஒரே நாளில் 110 மிமீ வரை மழை பதிவாகியிருந்தது. 1955ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே அதிகப்பட்ச மழையாகும் எனத் தெரிவித்துள்ளார்.

