கொடைக்கானலில் சுற்றுலா வேன் விபத்து; 12 மலேசியர்கள் காயம்

1 mins read
0988cbc9-6402-45e2-8356-a2d97e909012
மலைப்பாங்கான நிலப்பரப்பு காரணமாக 12 மலேசியர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலா வேன் சறுக்கியதில் சாலையிலிருந்து விலகி விபத்துக்குள்ளானது. - ஜெயா பிளஸ்/ஃபேஸ்புக்

கொடைக்கானல்: கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் மலேசியர்கள் 12 பேர் காயமடைந்ததாக மலேசிய வெளியுறவு அமைச்சு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

“அவர்களில் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. நால்வருக்குக் கடுமையான, ஆனால் உயிருக்கு ஆபத்து இல்லாத காயங்கள் ஏற்பட்டன. அனைவரும் உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,” என்று அமைச்சு வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியது.

சென்னையில் உள்ள மலேசியத் துணைத் தூதரகம், தேவையான உதவிகளை வழங்க, சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகள், காயமடைந்த மலேசியர்கள், மருத்துவமனைப் பிரதிநிதிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது என்று அமைச்சு தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட மலேசியர்களுக்கும் மலேசியாவில் உள்ள அவர்களின் உறவினர்களுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தவும் துணைத் தூதரகம் உதவியுள்ளது என்றும் அது மேலும் கூறியது.

மலைப்பாங்கான நிலப்பரப்பு காரணமாக 12 மலேசியர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலா வேன் சறுக்கியதில் சாலையிலிருந்து விலகி விபத்துக்குள்ளானது என்று அமைச்சு சொன்னது.

“இந்த விபத்து குறித்து அண்மைய தகவல்களைப் பெறுவதற்கும் பாதிக்கப்பட்ட மலேசியர்களுடன் தொடர்புகொள்வதற்கும் உள்ளூர் அதிகாரிகளைத் துணைத் தூதரகம் உடனடியாகத் தொடர்புகொண்டது.

“மலேசியப் பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டு, அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி அளிக்கப்பட்டது,” என்றும் அது தெரிவித்தது.

மலேசியர்கள் இந்தியாவில் பயணம் செய்யும்போது, குறிப்பாக பருவமழைக் காலத்தில் வழுக்கலான சாலைகள், நிலச்சரிவுகளுக்கு வாய்ப்புள்ள மலைப் பகுதிகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்