விழுப்புரம்: சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் எட்டு மணி நேரத்திற்குப்பின் போக்குவரத்து சீரானது.
மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் அருகே பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதன் காரணமாக திருச்சி செல்லும் பாதையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
திருச்சி உள்ளிட்ட மத்திய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களை நோக்கிச் செல்லும் வாகனங்கள் விழுப்புரத்திலிருந்து - புதுச்சேரி செல்லும் புற வழிச் சாலையான பண்ருட்டி வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றப்பட்டது.
இந்நிலையில், சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் விழுப்புரத்திலிருந்து திருச்சியை நோக்கிச் செல்லும் வழித்தடத்தில், சாலையில் ஒருபுறம் தண்ணீர் வடிந்ததால், இரவு எட்டு மணிக்கு மேல் அந்த மார்க்கத்தில் மட்டும் வாகனங்கள் சென்று வர அனுமதிக்கப்பட்டன. இதனால் அரசூர் அருகே சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் நான்கு வழிச்சாலையில் ஒருபுறத்தில் மட்டும், இருமார்க்கங்களிலும் வாகனங்கள் இயக்கப்பட்டன.
இந்த நிலையில், அரசூர், முண்டியம்பாக்கம் பகுதிகளில் நான்கு வழிச்சாலையில் வெள்ளம் வடிந்துவிட்டதால் வாகனப் போக்குவரத்து சீரானது.