மதுரை: மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் முடிவை முழுமையாகக் கைவிட வலியுறுத்தி மதுரையில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) போராட்டம் நடைபெற்றது.
மதுரையே ஒன்றுதிரண்டதுபோல் நகரெங்கும் மக்கள் கூட்டம் நிறைந்திருந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா குழுமத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரி மதுரை மாவட்டம் மேலூரில் முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
மேலூர் நரசிங்கம்பட்டியில் இருந்து தல்லாகுளம் நோக்கி காவல்துறையின் தடையை மீறி பொதுமக்கள் பேரணியாகச் செல்ல முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து அந்தப் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
காவல்துறையை மீறி பேரணியாக மக்கள் முன்னேறிச் சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடையை மீறிச் சென்றவர்களை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வாகனங்களில் அமைதியான முறையில் செல்லுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
பல்வேறு கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் மேலூர் நோக்கி பேரணியாகச் சென்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்தி காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தியது.
மேலூரில் காலை 6 மணி முதல் மருந்தகம், உணவகம் உள்ளிட்ட அனைத்து கடைகளும் திரையரங்குகளும் அடைக்கப்பட்டிருந்தன.
தல்லாகுளம் பகுதியில் பேரணியாகச் சென்ற கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
தலைமைத் தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் 4000க்கும் மேற்பட்ட விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
போராட்டக் குழுவினரிடம் காவல்துறையினர் கண்ணிய குறைவாக நடந்துகொள்ளக் கூடாது என்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட மாநகர காவல்துறையினரிடம் பேசிய மதுரை மாநகர காவல்துறை வடக்கு துணை ஆணையர் அனிதா அறிவுறுத்தினார்.
போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் தனிப்பட்ட முறையில் காவல்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது என்ற அவர், விவசாயிகள் போராட்டத்திற்கு காவல்துறை தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டிருந்ததைச் சுட்டினார்.
மதுரை மேலூர் அருகே அரிட்டாபட்டி உள்ளிட்ட இடங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா குழுமத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அந்த சுரங்க அனுமதிக்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.
தமிழ்நாடு சட்டமன்றத்திலும் டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.