சொகுசு தங்குவிடுதியில் தவெக வேட்பாளர்கள்: குதிரைப் பேரத்தைத் தடுக்க விஜய் நடவடிக்கை

சொகுசு தங்குவிடுதியில் தவெக வேட்பாளர்கள்: குதிரைப் பேரத்தைத் தடுக்க விஜய் நடவடிக்கை

2 mins read
877b36a3-23b9-4d4f-a441-f30c107b2255
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையையும் தமிழகத்தின் பக்கம் திருப்பியுள்ளது. - கோப்புப்படம்: இந்து தமிழ் திசை

சென்னை: தவெக சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் மாமல்லபுரத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையையும் தமிழகத்தின் பக்கம் திருப்பியுள்ளது.

யாரும் எதிர்பாராத வகையில் நடிகர் விஜய் தலைமையிலான தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

வாக்குகள் எண்ணும் பணியின்போது ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 118 இடங்களைத் தவெக நெருங்கிவந்த நிலையில், அக்கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களைத் தங்கள் பக்கம் இழுக்க திமுக, அதிமுக கட்சித் தலைமைகள் முயற்சி செய்யக்கூடும் எனத் தகவல் பரவியது. இந்தக் குதிரைப் பேரத்தைத் தடுக்க, விஜய் தரப்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே இரண்டு வாரங்களுக்கு முன் தன் கட்சி வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்திய விஜய், தேர்தலில் வெற்றிபெற்றதும் அவர்கள் அனைவரும் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வந்துவிட வேண்டும் என்றும் அவர்களுக்காகத் தாம் காத்திருக்கப்போகிறேன் என்றும் அவர் கூறியதாக செய்தி வெளியானது.

இந்நிலையில், மாமல்லபுரம் அருகே உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியில் தனது வேட்பாளர்களைத் தங்கவைக்க தவெக தலைமை ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

“ஏற்கெனவே எடப்பாடி தொகுதியில் தவெக போட்டியிட முடியாத வகையில் சதி நடந்தது. எனவே, தேர்தல் முடிவுகள் வெளியானதும் குதிரைப் பேரம் நடக்க நிறைய வாய்ப்புள்ளது,” என்று தவெக நிர்வாகிகள் கூறியதாகத் தமிழக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி பகுதியில் தனியார் தங்குவிடுதி ஒன்றில், தவெக வேட்பாளர்களைத் தங்கவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் தவெக வேட்பாளர்களைப் பாதுகாப்பாக அங்கு அழைத்துவரும் பொறுப்பை கட்சி நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவிடம் விஜய் ஒப்படைத்துள்ளார் என்றும் அந்த ஊடகச் செய்தி மேலும் தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்