சென்னை: நடிகர் விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றபோது, வழியில் விபத்தில் நால்வர் உயிரிழந்துவிட்டனர்; பலர் காயமடைந்துள்ளனர்.
தவெக முதல் மாநாடு விக்கிரவாண்டியில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) நடைபெற்றது.
காலை 10 மணிக்கு மேல்தான் உள்ளே தொண்டர்கள் அனுமதிக்கப்படுவர் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளபோதும் அதிகாலையில் இருந்தே ஏராளமான தொண்டர்கள் மாநாடு நடக்கும் இடத்தில் திரளத் தொடங்கினர்.
இவ்வேளையில், தவெக தொண்டர்கள் சென்ற வாகனங்கள் சில விபத்துக்குள்ளாகின.
சென்னை தேனாம்பேட்டையில் இளையர்கள் இருவர் தவெக கொடியுடன் மோட்டார்சைக்கிளில் மாநாட்டிற்குச் சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தனர். பின்னர் அவர்களில் ஒருவர் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல, மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையைச் சேர்ந்த நிதிஷ்குமார் என்ற ஆடவர், தன் நண்பர்களுடன் ரயிலில் விழுப்புரத்திற்குச் சென்றார். அதிகாலைப் பொழுதில் ரயில் விக்கிரவாண்டியை நெருங்கியபோது, தண்டவாளத்தை ஒட்டி 50 மீட்டர் இடைவெளியில் தவெக மாநாட்டுப் பந்தல் இருந்ததை அவர்கள் கண்டனர்.
உற்சாக மிகுதியில் நிதிஷும் அவருடைய நண்பரும் ஓடும் ரயிலிலிருந்து இறங்க முயன்றனர். அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்த அவர்கள் இருவரும் படுகாயமடைந்தனர். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி நிதிஷ் உயிரிழந்தார்.
அதுபோல், திருச்சியிலிருந்து மாநாட்டிற்குச் சென்ற வாகனம் உளுந்தூர்பேட்டை அருகே சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் அவ்விடத்திலேயே இருவர் மாண்டுபோயினர்; ஒருவர் காயமுற்றார்.
தொடர்புடைய செய்திகள்
மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றவர்கள் இருந்த ஒரு வேன், சென்னை தாம்பரம் அருகே கவிழ்ந்ததில் 11 பேர் காயமடைந்தனர்.
முன்னதாக, பாதுகாப்பு கருதி மாநாட்டிற்கு வரும் தவெக தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் வர வேண்டாம் என்று விஜய் வேண்டுகோள் விடுத்திருந்தார்.