சென்னை: தமிழக அமைச்சரவையில் பங்கேற்க முன்வருமாறு விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தவெக அழைப்பு விடுத்துள்ளது.
இதுதான் முதல்வர் ச.ஜோசப் விஜய்யின் விருப்பம் என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
அமைச்சரவை விரிவாக்கம் குறித்த அறிவிப்பை திரு விஜய் விரைவில் வெளியிடுவார் என்றும் சமூக நீதி அடிப்படையில் இயங்கக் கூடிய தலைவர்களும் கட்சிகளும் அமைச்சரவையில் இணைய வேண்டும் என்றும் திரு ஆதவ் வலியுறுத்தினார்.
“குறிப்பாக, முதல்வர்மீது நம்பிக்கை வைத்து காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய ஆதரவு கொடுத்தது. அவர்கள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
“அதேபோல, வெளியிலிருந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்ற இடதுசாரி கட்சிகளின் கொள்கை முடிவை எப்போதும் மதிப்போம். இந்த அரசு எப்போதும் சமூக நீதிக்கான அரசாக இருக்கும்,” என்றார் அமைச்சர் ஆதவ்.
சமயச் சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருப்போம் என்று குறிப்பிட்ட அவர், அமைச்சரவையில் பங்குபெற விசிக தலைவர் தொல்.திருமாவளவன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு அழைப்பு விடுத்திருப்பதாகக் கூறினார்.
முஸ்லிம் சகோதரர்களும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, தமிழக அமைச்சரவை வியாழக்கிழமை (மே 21) விரிவாக்கப்பட இருப்பதாக தமிழக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், அதிமுக எம்எல்ஏக்களில் ஒரு பிரிவினர் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதை அடுத்து, அவர்களுக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

