சென்னை: பொதுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் மக்களுக்குத் துணை நின்று, அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என தவெக மாவட்டச் செயலாளர்களுக்கு அக்கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்களே உள்ள நிலையில், அமைப்பு ரீதியாக தவெக இன்னும் தயாராகவில்லை என்றும் மாவட்டச் செயலாளர்கள் உட்பட இன்னும் நியமிக்கப்படவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கினார்.
இதுவரை நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாகவும் விரைவில் மற்ற நிர்வாகிகள் குறித்த முக்கியமான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் பேசிய அவர், தவெகவுக்கு கால அவகாசம் குறைவாக உள்ளது என்றும் மக்கள் பணிகளோ அதிகமாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
“வீடு வீடாகச் சென்று தவெகவின் கொள்கைகளை எடுத்துக் கூறுங்கள். மக்களின் நம்பிக்கையைப் பெறுங்கள். மக்கள் பிரச்சினைகளுக்கு தவெக என்றும் துணை நிற்கும் என்று கூறுங்கள்.
“நம்முடைய நோக்கம், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவது மட்டுமே. அதை மனதில் வைத்து பணிகளை மேற்கொள்ளுங்கள்,’’ என்றார் ஆனந்த்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, இம்மாத இறுதிக்குள் மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான சார்பு அணி நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என மாவட்டச் செயலாளர்களுக்கு தவெக தலைமை உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, ஆறு மாவட்டங்களுக்கு புதிய செயலாளர்களை நியமிக்க முடிவு செய்துள்ள விஜய், விரைவில் அவர்களின் பெயர்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

