சென்னை: கொண்டாட்டம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு எந்த வகையிலும் இடையூறுகளை ஏற்படுத்தக்கூடாது எனத் தொண்டர்களுக்கு தவெக அறிவுறுத்தியுள்ளது.
அண்மையில் கள்ளக்குறிச்சி மாவட்ட தவெக நிர்வாகி ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது சாலையில் பட்டாசு வெடித்து தவெக தொண்டர்கள் மகிழ்ந்தனர். இதன் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.
இதையடுத்து, தவெகவினருக்கு கண்டனம் தெரிவித்து சமூக ஊடகங்களில் பலர் பதிவிட்டனர். இதைக் கவனத்தில் கொண்ட தவெக தலைமை, தொண்டர்களை எச்சரித்துள்ளது.
அக்கட்சிப் பொதுச் செயலாளர் ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் பொது இடங்கள், சாலைகளில் பதாகைகள் வைக்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், மக்களுக்கு இடையூறு தரும் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் இல்லையெனில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திரு ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.

