மதுரை: காவல்துறை அறிவுறுத்தியதன் பேரில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மதுரை மாநாடு நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.
தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரையில் நடக்குமென அக்கட்சியின் தலைவர் விஜய் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
இது தொடர்பாக கடந்த ஜூலை 15ஆம் தேதியன்று மதுரையின் பாரபத்தியில் மாநாட்டுக்கான பூமி பூசை நடைபெற்றது. அன்றைய தினமே மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மாநாட்டு நடத்த அனுமதி கேட்டு ஆனந்த் மனு அளித்திருந்தார்.
ஆனால், மனு அளித்து இரண்டு வாரங்கள் ஆகியும் காவல்துறை தரப்பில் அனுமதி கொடுக்கப்படவில்லை. வேண்டுமென்றே இழுத்தடிக்கப்படுவதாக தவெக நிர்வாகிகள் புகார் எழுப்பினர்.
இந்நிலையில், மாநாடு நடக்கும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கு முன்பாகவே (ஆகஸ்ட் 21ம் தேதி) மாநாடு நடக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய என்.ஆனந்த், “ஆகஸ்ட் 27ஆம் தேதி பிள்ளையார் சதுர்த்தி வருகிறது. அதையொட்டி காவல்துறைக்குப் பாதுகாப்புப் பணிகள் அதிகம் இருப்பதால் ஆகஸ்ட் 18 முதல் 22ஆம் தேதி வரையிலான தேதியில் மாநாடு வைத்துக் கொள்ளுங்கள் எனக் காவல்துறை எங்களிடம் கேட்டுக் கொண்டது.
“காவல்துறையின் அறிவுறுத்தலின்படி, ஆகஸ்ட் 18 முதல் 22ஆம் தேதிக்குள் ஒரு தேதியைத் தேர்வு செய்து மாநாடு நடத்த அனுமதி கேட்டிருக்கிறோம். அது எந்தத் தேதி என்பதை தவெக தலைவர் விஜய் அறிவிப்பார்,” என்றார்.