கோல்கத்தா: தமிழகத்தைத் தொடர்ந்து பிற மாநிலங்களிலும் அமைப்பை வலுப்படுத்தும் முயற்சியாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மேற்கு வங்கத்தில் தனது முதல் கட்சி அலுவலகத்தைத் திறந்துள்ளது.
மேற்கு வங்கத்தின் பூர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள பாகுபூர் பகுதியில் இந்தப் புதிய அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர் சைதாலி ராய், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் இந்த தொடக்க விழா நடைபெற்றது.
கட்சி அமைப்பை விரிவாக்குவது குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் சைதாலி ராய் செய்தியாளர்களிடம் பேசினார்.
தமிழகத் தலைமையின் வழிகாட்டுதலின்படி, புதிய மாநிலங்களில் ஆரம்பக் கட்டமாக அரசியல் பிரசாரங்களைவிட மக்கள் நலன் சார்ந்த சமூகப் பணிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் இதன் மூலம் சாதாரண மக்களுடன் நேரடியாக நட்புறவை ஏற்படுத்த கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
பூர்பா பர்தமானில் நிர்வாகப் பணிகள் முறைப்படி தொடங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து வரும் நாள்களில் பீர்பூம், பாங்குரா, புருலியா ஆகிய அண்டை மாவட்டங்களிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைப்பை விரிவுபடுத்த அக்கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது.
தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட ஒரு புதிய அரசியல் கட்சி, கிழக்கு இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தில் தனது முதல் அலுவலகத்தைத் திறந்து காலடி பதித்துள்ளது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
