சென்னை: நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அம்மாநாடு வெற்றிபெறும் என்றும் வரும் தேர்தலில் ‘தவெக வாகை சூடும், வரலாறு திரும்பட்டும், வெற்றி நிச்சயம்’ என்றும் விஜய் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மதுரை பாரப்பத்தி பகுதியில் 237 ஏக்கர் பரப்பளவில் தவெக மாநில மாநாட்டுக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி ஜூலை 16ஆம் தேதி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்நிலையில் தாம் வெளியிட்ட அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகமானது தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தி என விஜய் குறிப்பிட்டுள்ளார்.
தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு, வரும் ஆகஸ்ட் 25ம் தேதி திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெகவின் முதல் மாநாடு நடந்தது. இதில் லட்சக்கணக்கானோர் கூடினர். தென் மாவட்டங்களில் தனது பலத்தை நிரூபிக்க விஜய் இரண்டாவது மாநில மாநாட்டை மதுரையில் நடத்த உள்ளார். மதுரையில் எப்போதுமே அரசியல் நிகழ்வுகளுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சமிருக்காது. அங்கு அண்மையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சாலைக்காட்சி நடத்தினார்.
இந்து முன்னணி முருகன் மாநாடு நடத்தியது. பல்வேறு கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் நடந்து வருகின்றன. மறைமுக தேர்தல் பிரசாரமும் நடந்து வரும் நிலையில், தவெக மாநாடும் நடைபெற இருப்பதாக அறிவித்துள்ளார் விஜய்.
மதுரையும் அரசியலும்
தமிழக அரசியல் களத்தில் மதுரை மிக முக்கியமான இடத்தைக் கொண்டுள்ளது. மதுரையும் அரசியலும் பிரிக்க முடியாதவை. எம்ஜிஆர் காலம் தொட்டு மதுரைக்கும் புதிதாக அரசியலில் தடம் பதிப்பவர்களுக்கும் ஒரு ‘ராசி’ இருக்கிறது. அந்த ‘ராசி’ விஜய்க்கு எப்படிப் பொருந்துகிறது என்று பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு விஜய் அறிவிப்பால் ஏற்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதுவும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தேர்தல் களத்தின் நாடித்துடிப்பை அறிந்துகொள்ளும் வகையில் விஜய்யின் இந்த மதுரை மாநாடு அமையும் என்று அரசியல் நிபுணர்கள் கணிக்கின்றனர்.
அண்மையில் சென்னை பனையூரில் தவெக முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் விஜய் தனது கூட்டணி நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருந்தார். அதன் மீது இன்னும் சற்று உறுதியான நிலைப்பாடு மதுரை மாநாட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் தமிழகத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி ஒருபுறமும், அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மறுபுறமும் இருக்க நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் இரண்டு கட்சிகளும் தனித்தனியே களமிறங்கியுள்ளன.