ரயிலில் மூன்று வேளை இலவச உணவு

1 mins read
47c48155-6947-42d9-9d7e-aeff4f58c3a1
ஆறு ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான இலவச உணவு வழங்கப்படுகிறது. - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவின் அமிர்தசரஸ் - நாந்தேட் நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் பயணம் மேற்கொள்வோர்க்கு காலை, நண்பகல், இரவு என மூன்று வேளையும் சுடச்சுட இலவச உணவு கிடைக்கிறது.

இந்த ரயில் 33 மணி நேரத்தில் மொத்தம் 2,081 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கிறது.

கிட்டத்தட்ட இரண்டு நாள்கள் ரயில் பயணம் செல்லும்போது உணவின்றி எப்படிச் சமாளிக்க முடியும் என்று யோசிக்கத் தேவை இல்லை.

ஏனெனில், கடந்த 29 ஆண்டுகளாக இந்த ரயிலில் செல்லும் பயணிகளுக்கு இலவச உணவு கிடைத்து வருகிறது.

இந்த விரைவு ரயில் மொத்தம் 39 ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

அவற்றுள் ஆறு நிலையங்களில் பயணிகளுக்கான இலவச உணவு வழங்கப்படுகிறது.

பயணிகள் தாங்கள் வைத்திருக்கும் பாத்திரங்களில் உணவைப் பெறலாம். தரமாக தயாரிக்கப்படும் உணவு என்பதால் பயணிகள் அதனைப் பெறத் தயங்குவதில்லை.

“சாதம், கொண்டைக்கடலை, பருப்பு, கிச்சடி, உருளைக்கிழங்கு - காலிஃபிளவர் அல்லது பிற காய்கறிகள் என சத்தான உணவுகள் சுடச்சுட வழங்கப்படும்.

“அவற்றைச் சில சீக்கியக் கோவில்கள் வழங்கி வருகின்றன. உணவுக்கான செலவுகள் அக்கோவில்களால் பெறப்படும் நன்கொடைகள் மூலம் வழங்கப்படுகின்றன,” என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்