சென்னை: பள்ளிகளில் மாணவர்களுக்கு ’ப’ வடிவில் இருக்கை வசதி செய்து தரப்பட வேண்டும் எனப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.
இது தொடர்பாக அனைத்துப் பள்ளிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தமிழகப் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கேரளாவில் அண்மையில் வெளியான, ‘ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்’ என்ற திரைப்படம் அங்கு பல்வேறு விவாதங்களை எழுப்பி உள்ளது.
ஒரு பள்ளி வகுப்பறையில் கிராமத்து மாணவர்கள் கடைசி வரிசையில் அமர வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் அம்மாணவர்களின் நலன் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை அப்படத்தில் காட்சிப்படுத்தி உள்ளனர்.
எனவே, அரை வட்ட வடிவில் மாணவர்களின் இருக்கை மாற்றி அமைக்கப்பட்டால், கடைசி வரிசை மேசை என்ற நல்ல கருத்தும் அந்தப் படத்தில் வலியுறுத்தப்பட்டு இருந்தது.
இக்கருத்தால் கவரப்பட்ட கேரள மாநிலத்தின், சில பள்ளிகளின் நிர்வாகத்தரப்பு ‘ப’ வடிவில் மாணவர்களின் இருக்கைகளை மாற்றியமைத்தன.
மேலும், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களிலும் சில பள்ளிகளில் இத்தகைய மாற்றத்தைச் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாயின.
இந்தத் தாக்கம் தமிழகத்திலும் எதிரொலித்துள்ளது. இந்த மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புள்ள பள்ளிகளில், ‘ப’ வடிவில் வகுப்பறை இருக்கை வரிசையை மாற்றி அமைக்க வேண்டும் எனப் பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், அரசின் எதிர்பாராத இந்த உத்தரவை சமூக வலைத்தளங்களில் பலர் வரவேற்றாலும், சில தரப்பினர் கடுமையாக விமர்சிக்கவும் செய்தனர்.
எனவே, உத்தரவு பிறப்பித்த அதே நாளிலேயே ‘ப’ வடிவில் மாற்றி அமைக்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. வல்லுநர்களிடம் உரிய ஆலோசனை பெற்று ஒரு வாரத்தில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.