சென்னை: தமிழகத் துணை முதல்வராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மேலும், தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மூன்று பேர் நீக்கப்பட்டு, நான்கு பேர் இணைக்கப்பட்டுள்ளனர்.
உதயநிதி உள்ளிட்டோர் செப்டம்பர் 29ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டனர்.
முன்னதாக, அமைச்சரவை மாற்றத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த 26ஆம் தேதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அவர் மீண்டும் அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளார். அவருக்கு மின்சாரத் துறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோவி.செழியன், சா.மு.நாசர், பனைமரத்துப்பட்டி ஆர்.ராஜேந்திரன் ஆகியோரும் தமிழக அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்றுள்ளனர்.
இதுவரை இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த திரு.உதயநிதி ஸ்டாலினுக்கு, தற்போது கூடுதலாக திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை ஆகியவை அளிக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இதுவரை, பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஐந்தாவது முறையாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ‘துணை முதல்வர் என்பது பதவியல்ல, பொறுப்பு’ என்றும் ‘இணைந்து பணியாற்றுவோம்’ என்றும் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு முன்பு உதய நிதி தெரிவித்தார்.
இது தொடர்பாக சமூக ஊடகத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
“நம் பெருமைமிகு தமிழ்நாட்டின் துணை முதல்வராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை நமக்கு அளித்த முதல்வர் ஸ்டாலின், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் அமைச்சர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம்.
“துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக, பெரியார், அண்ணா, கலைஞர் வகுத்துத் தந்த பாதையில், முதல்வரின் வழிகாட்டலில், சக அமைச்சர் பெருமக்களோடு இணைந்து பணியாற்றுவோம். அன்பும் நன்றியும்” என்று உதயநிதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டதை பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
திமுகவில் வாரிசு அரசியல் நீடிப்பதாக பாஜக விமர்சித்துள்ளது.

