சென்னை: தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விரைவில் துணை முதல்வராகப் பொறுப்பேற்பார் என அண்மையில் தகவல் வெளியானது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டபோது இந்த ஆரூடத் தகவல் மேலும் வலுவடைந்தது.
எனினும், திமுக தலைமை இத்தகவலை மறுத்ததை அடுத்து, இது தொடர்பாக மேற்கொண்டு யாரும் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் அடுத்த 10 நாள்களுக்குள் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வராக பதவி ஏற்க வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படுவது குறித்து அடுத்து ஓரிரு நாள்களுக்குள் கூட அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
மேலும், அடுத்து 10 நாள்களுக்குள் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பு ஏற்கப்போவது உறுதி என்றும் அமைச்சர் அன்பரசன் திட்டவட்டமாக கூறினார்.
இதற்கிடையே உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவியை உரிய நேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குவார் என தமிழக சிறுபான்மையின அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உதயநிதி ஸ்டாலின் கடும் உழைப்புக்கு எடுத்துக்காட்டாக இருப்பதாக குறிப்பிட்டார்.
“தமிழகம் முழுவதும் இளையர்களை ஒன்று சேர்த்து திமுகவை வலுப்படுத்துகிறார் அமைச்சர் உதயநிதி. இந்த உழைப்புக்கு ஏற்றவாறு உரிய நேரத்தில் கருணாநிதியைப் போல் முதல்வர் ஸ்டாலினும் உதியநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பை அளிப்பார்,” என்றார் அமைச்சர் செஞ்சி மஸ்தான்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே உதயநிதி, முதல்வர் ஸ்டாலினைவிட அதிகமாக உழைப்பதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
“அப்பாவுக்கு தப்பாத பிள்ளையாக உள்ளார் உதயநிதி. முதல்வர் மு.க.ஸ்டாலினைவிட அதிகமாக உழைக்கிறார். திமுகவை வழிநடுத்த அடுத்த தலைவராக உதயநிதி தயாராக இருக்கிறார்.
“நாங்கள் தலைவரைத் தேட வேண்டிய அவசியமில்லை. அடுத்த 25 ஆண்டுகளுக்கு திமுகவை யாராலும் அசைக்க முடியாது,” என்றார் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்.
மூத்த அமைச்சர்கள் பலர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து சூசகமாக தெரிவித்துள்ள தகவல்களையடுத்து உதயநிதிக்கு நிச்சயமாக பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக திமுக நிர்வாகிகள் பலர் கூறுகின்றனர்.

