சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சையில், முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்ததாகத் தொடரப்பட்ட புகாரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை தஞ்சை காவல்துறை கைது செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் காவல்துறையின் கைது நடவடிக்கையை நகைச்சுவையாகப் பார்ப்பதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் திமுக சார்பில் திங்கட்கிழமை (ஆகஸ்டு 3) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இழிவாகப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அவரது சர்ச்சை பேச்சுக்கு மாற்றுக் கட்சியினர், அரசியல் அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பாஜக நிர்வாகியான குஷ்பு, “பொது மேடையில் திரிஷாவை அவமதித்ததற்காக உதயநிதி ஸ்டாலின் அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “உதயநிதி ஸ்டாலினின் பேச்சைக் கேட்டேன். அது மிகவும் தரக்குறைவானதாகவும் அவமதிப்புக்குரியதாகவும் இருந்தது. அவர் எத்தகைய அரசியல் கலாசாரத்தை உருவாக்கத் துடிக்கிறாரோ, அதையே அது பிரதிபலித்தது.
“இத்தகைய மனநிலை கொண்டவர்கள் ஓர் அரசியல் கட்சியை வழிநடத்தவும், ஒரு நாள் மாநிலத்தை ஆளவும் விரும்பினால், கடவுள்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும். பெண்களைத் தரக்குறைவாகப் பேசுவதையும் இழிவுபடுத்துவதையும் ஒரு அரசியல் நாடகமாகப் பார்த்து, தங்கள் ஆதரவாளர்களின் கைத்தட்டல், விசில் மற்றும் சிரிப்பொலியில் மகிழ்ந்து திளைப்பவர்களிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்? இதை என்னைவிட வேறு யார் நன்கு அறிவார்கள்,” என்று குஷ்பு குறிப்பிட்டுள்ளார்.
உதயநிதியை விமர்சித்து முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலையும் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக சென்னை நீலாங்கரை வீட்டிலுள்ள உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்வதற்காக தஞ்சாவூர் காவல்துறை அதிகாரிகளும் சென்னை காவல்துறை அதிகாரிகளும் சென்றனர்.
இந்தச் சூழ்நிலையில் உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்யத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், பகல் 12 மணி வரை கைது நடவடிக்கை கூடாது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.
ஆனால், விசாரணைக்காக உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு தஞ்சாவூருக்கு காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.
காவல்துறை வாகனத்தில் ஏறிய உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுடன் பேசினார்.
“என் மீதான கைது நடவடிக்கையை நகைச்சுவையாகப் பார்க்கிறேன். நான் பேசாததை ‘கட்’, ‘காபி’, ‘பேஸ்ட்’ செய்தி பரப்புகிறார்கள். டம்மி முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ரீல்ஸ் மோகத்தில் செயல்படுவதாகப் போராட்டத்தில் பேசினேன். ஏதாவது பிரச்சினை நடந்தால் அதை திசை திருப்ப முயற்சிக்கிறது தவெக அரசு,” என்று குறிப்பிட்டார்.
இதற்கிடையே உதயநிதியின் பேச்சுக்கு எதிராக தவெகவினர் போராட்டம் நடத்தும் சூழல் உள்ளதால் நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் வீட்டின் முன்பு ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.


