ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப் பாக்கம் பத்திரப்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் சனிக்கிழமை அதிரடிச் சோதனை மேற்கொண்டனர். அப்போது பதிவறை, கணினி அறை, தரகர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.46 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.
காவேரிப்பாக்கம் பத்திரப் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு வரும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவதாக தொடர்ந்து புகார் எழுந்தது. இது குறித்து மாவட்ட ஆய்வுக் குழு துணை அலுவலர் முருகனுக்கு ரகசிய தகவலும் சென்றது.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காவேரிப்பாக்கம் பத்திரப் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
தமிழ் நாட்டில் உள்ள பத்திரப் பதிவகங்களில் லஞ்சம் வாங்குவதாக அடிக்கடி புகார்கள் எழுந்து வருகின்றன. அதையடுத்து இது போன்ற அதிரடிச் சோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது.