சென்னை: தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஆசிரியர்கள் 32,500 பேருக்கு கடந்த மாதத்துக்கான ஊதியமே கிடைக்கவில்லை என தினமலர் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதிப் பற்றாக்குறைக்கு மத்திய அரசைக் காரணம் காட்டி, தமிழக அரசு பொறுப்பைத் தட்டிக்கழிக்காமல், தங்களுக்குச் சம்பளம் தர வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளதாக அந்தச் செய்தி மேலும் தெரிவிக்கிறது.
“தமிழகத்தில் மத்திய - மாநில அரசுகள் இணைந்து, கல்வி வளர்ச்சிக்காக ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தை செயல்படுத்துகின்றன. இதற்காக நிரந்தர ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என 15,000 பேரும் ஒப்பந்த அடிப்படையில் 17,500 பேரும் என ஒட்டுமொத்தம் 32,500 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்குக் கடந்த மாதத்துக்கான ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.
“இந்தத் திட்டத்திற்காக நடப்பாண்டு ரூ.3,585 கோடி ஒதுக்கப்பட்டது. மத்திய அரசு தன் பங்காக இன்னும் ரூ.822 கோடி வழங்கவேண்டும். இந்தத் தொகை கிடைக்காததால்தான் ஊதியம் வழங்க முடியவில்லை என ஒருங்கிணைந்த கல்வித்திட்ட அதிகாரிகள் கூறுகின்றனர்.
“மத்திய அரசிடம் இருந்து நிதியைப் பெறவேண்டியது தமிழக அரசின் பொறுப்பு,” என பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறியதாக ஊடகச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.