தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
முன்னெச்சரிக்கை, நிவாரண நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை 

தமிழ்நாட்டில் விடாது பெய்யும் மழை; வெள்ளத்தில் மிதக்கும் தென்மாவட்டங்கள்

2 mins read
34a72823-bb7e-4ce4-96ac-2c3e7f46a304
தென்காசியில் கனத்த மழையினால் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. - படம்: தமிழக ஊடகம்
multi-img1 of 2

சென்னை: தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதையொட்டி அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை, நிவாரண நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை (டிசம்பர் 14) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அணைகளின் நீர் இருப்பைக் கண்காணிக்க வேண்டும் என்றும் அணைகளில் இருந்து நீரைத் திறந்துவிடும்போது பொதுமக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

கனமழையால் ஏற்பட்ட பயிர்ச்சேத விவரங்கள் உட்பட அனைத்து சேத விவரங்களையும் விரைவாகக் கணக்கிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கடந்த மூன்று நாள்களாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை முதல் அதிகனமழை பதிவானதன் காரணமாக, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே, அமைச்சர் கே.என். நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இருவரும் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.

அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று திங்கட்கிழமை (டிசம்பர் 15) உருவாவதால், தமிழகத்தில் பருவமழை மேலும் தீவிரம் அடையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகர உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக 16, 17, 18 தேதிகளில் டெல்டா, வடகடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். 17, 18 தேதிகளில் தமிழ்நாட்டில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதனிடையே, அந்தமான் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரக்கூடிய மழை குறித்தும் விவாதித்த ஸ்டாலின், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

குறிப்புச் சொற்கள்