மத்திய அரசைக் கண்டித்து யுபிஐ பரிவர்த்தனைகள் நிறுத்தம்

மத்திய அரசைக் கண்டித்து யுபிஐ பரிவர்த்தனைகள் நிறுத்தம்

கோப்புப்படம்

01 Oct 2026 - 3:52 pm

1 mins read

சென்னை: மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள கடைகளில் யுபிஐ மின்னியல் பணப் பரிவர்த்தனைகள் முழுமையாக நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் எஸ்.சௌந்தரராஜன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ரூ.2,000-க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கும் மத்திய அரசின் முடிவால் வணிகர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வணிகர்களுக்கு எதிரான மத்திய அரசின் போக்கைக் கண்டித்து, வரும் அக்டோபர் 7ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

அகில இந்திய வியாபாரிகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, அந்தப் போராட்டத்திற்கு முன்னோட்டமாகவும், வணிகர்களின் எதிர்ப்பை மத்திய அரசுக்கு அறவழியில் உணர்த்தும் வகையிலும் முக்கிய முடிவொன்று எடுக்கப்பட்டுள்ளது.

அந்நியப் பொருட்களையும் அநீதியான வரிகளையும் எதிர்த்துப் போராடிய அண்ணல் காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதி, தமிழகத்தில் உள்ள அனைத்து வணிகர்களும் தங்கள் கடைகளில் யுபிஐ, கியூஆர் கோடு பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து மின்னியல் பரிவர்த்தனைகளையும் ஒருநாள் முழுவதும் நிறுத்தி வைக்க வேண்டும்.

ரொக்கப் பணப் பரிவர்த்தனைகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும், இது குறித்த அறிவிப்புப் பலகைகளைக் கடைகளின் முன்பாகப் பொதுமக்கள் அறியும் வண்ணம் வைக்க வேண்டும் என்றும் வணிகர்களுக்கு வணிகர் சங்கப் பேரவை அறிவுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
யுபிஐமத்திய அரசுதமிழ் நாடு