திண்டுக்கல்: வந்தே பாரத் கதவுகள் திறக்காததால், திண்டுக்கல்லில் இறங்கவேண்டிய பயணிகள், கொடைரோடு ரயில் நிலையத்தில் இறக்கிவிடப்பட்டனா்.
சென்னையில் இருந்து வந்த வந்தே பாரத் ரயிலின் தானியங்கி கதவுகள் திறக்காததால், திண்டுக்கல்லில் இறங்க வேண்டிய பயணிகள், கொடைரோடு ரயில் நிலையத்தில் இறக்கிவிடப்பட்டனா்.
சென்னையில் இருந்து மதுரைக்கு வந்த ‘வந்தே பாரத்’ ரயில் சனிக்கிழமை இயக்கப்பட்டது. திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இரவு 8 மணியளவில் ரயில் நின்றபோது, சி-4 முதல் சி-7 வரையிலான கடைசி நான்கு பெட்டிகளின் தானியங்கிக் கதவுகள் திறக்கவில்லை. இதனால், திண்டுக்கல்லில் இறங்க முடியாமல் பயணிகள் தவித்தனா்.
இதற்கிடையே, அந்த ரயில் அங்கிருந்து புறப்பட்டது. அதனால், பயணிகள் சப்தமிட்டனா். இதுகுறித்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ரயில்வே ஊழியா்கள் கதவுகளைச் சோதனை செய்து மீண்டும் இயக்கச் செய்தனா். பின்னா், திண்டுக்கல்லில் இறங்க வேண்டிய பயணிகள் வந்தே பாரத் ரயில் நிறுத்தம் இல்லாத சுமாா் 25 கி.மீ.தொலைவில் உள்ள கொடைரோடு ரயில் நிலையத்தில் இறக்கிவிடப்பட்டனா்.
இதனால், ஆத்திரமடைந்த பயணிகள் ரயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா், பயணிகள் அனைவரும் தூத்துக்குடியில் இருந்து மைசூரு சென்ற விரைவு ரயிலில் இரவு 8.40 மணியளவில் ஏற்றி திண்டுக்கல்லுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.