விருதுநகர்: வெம்பக்கோட்டையில் அகழாய்வுப் பணிகளைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அங்கு தற்போது மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிக்கப்பட உள்ளன. வரும் மே மாதம் இப்பணிகள் முடிவடையும்.
கீழடி, சிவகலை, மயிலாடும்பாறை, கங்கைகொண்டசோழபுரம் ஆகியவற்றைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி, தர்மபுரி உள்ளிட்ட இடங்களில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் கடந்த 2022ஆம் ஆண்டு, மார்ச் 16ஆம் தேதி முதற்கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன.
அப்போது, நுண்கற்கால கருவிகள், பல வகையான பாசிமணிகள், சுடு மண்ணாலான காதணிகள், பொம்மைகள், தக்களி, சங்ககால வளையல்கள், மோதிரங்கள், சில்லு வட்டுகள், இரும்பு உருக்கு கழிவுகள், சங்கு வளையல்கள் என 3,254 பழங்காலப் பொருள்கள் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்ட ஆய்வில் ஏறக்குறைய 4,660 பழங்காலப் பொருள்களும் மூன்றாம் கட்டப் பணிகள் மூலம் இதுவரை 4,100 பழங்காலப் பொருள்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் மூலம் பண்டைய தமிழரின் பாரம்பரியமும் வரலாறும் தொன்மையானது என்பதை நிரூபிக்க முடிந்தது.
அண்மையில் தமிழக அரசு தாக்கல் செய்த வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் கீழடி, சேலம், கோவை, கள்ளக்குறிச்சி, கடலூர், தென்காசி, தூத்துக்குடி, நாகை மாவட்டங்களில் புதிதாக அகழாய்வு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்த அறிவிப்பில் வெம்பக்கோட்டை இடம்பெறவில்லை. இதனால் விருதுநகர் மாவட்ட வரலாற்று ஆய்வாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
“வெம்பக்கோட்டையில் அகழாய்வு நடத்த 25 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஐந்து ஏக்கரில்கூட அகழாய்வு முடிக்கப்படவில்லை.
“இந்நிலையில், அகழாய்வுப் பணிகளை முடித்துவிடாமல் தொடர்ந்து அப்பணிகளை மேற்கொண்டு மேலும் பல தொல்லியல் ஆதாரங்களைக் கண்டறிய வேண்டும்,” என ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.