வலசைப் பறவைகளால் புதுப்பொலிவு பெற்ற வேட்டாம்பாடி, பண்ணவாடி ஏரிகள்

வலசைப் பறவைகளால் புதுப்பொலிவு பெற்ற வேட்டாம்பாடி, பண்ணவாடி ஏரிகள்

படம்: தினத்தந்தி

13 Nov 2026 - 7:09 pm

1 mins read

சேலம்: நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களிலுள்ள ஏரிகளுக்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வலசைப் பறவைகளின் வருகை அதிகரித்துள்ளதால், அப்பகுதிகள் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றன.

சேந்தமங்கலம் - நாமக்கல் முதன்மைச் சாலையில் அமைந்துள்ள வேட்டாம்பாடி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, பல்வேறு வகையான வலசைப் பறவைகள் அங்கு வரத் தொடங்கியுள்ளன.

ஏரியிலுள்ள மரங்களின் கிளைகள் முழுவதும் பறவைகள் கூட்டம் கூட்டமாக முகாமிட்டுள்ளதால், தொலைவிலிருந்து பார்க்கும்போது ஏரிப் பகுதியே வெண்போர்வை போர்த்தியதுபோல் ரம்மியமாகவும், பறவைகள் சரணாலயம் போலவும் காட்சியளிக்கிறது. இயற்கை அழகுடன் இணைந்த பறவைகளின் அணிவகுப்பைக் காணப் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்துசெல்கின்றனர்.

மேட்டூர் அணையின் பின்புறமுள்ள பண்ணவாடி ஏரிக்கு ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் ஏராளமான ஐரோப்பிய வல்லூறுகள் வலசை வந்துள்ளன.
மேட்டூர் அணையின் பின்புறமுள்ள பண்ணவாடி ஏரிக்கு ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் ஏராளமான ஐரோப்பிய வல்லூறுகள் வலசை வந்துள்ளன. - படம்: தினமலர்

இதேபோல், சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் பின்புறமுள்ள பண்ணவாடி ஏரிக்கு ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் ஏராளமான ஐரோப்பிய வல்லூறுகள் வலசை வந்துள்ளன. பரிசல் துறை மற்றும் நீரில் மூழ்கிய பழமையான கோயிலுக்குப் புகழ்பெற்ற பண்ணவாடி நீர்நிலைக்கு, ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து கடுங்குளிரைத் தவிர்ப்பதற்காக இவை வலசை வந்துள்ளதாக இயற்கை வரலாற்றுக் கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

கொன்றுண்ணிப் பறவை வகையைச் சேர்ந்த ஐரோப்பிய வல்லூறுகளில், ஆண் பறவை சாம்பல் கலந்த நீல நிறத்திலும் மார்புப் பகுதியில் செம்பழுப்புக் கோடுகளுடனும் காணப்படும்; பெண் பறவை ஆண் பறவையைவிடச் சற்றுப் பெரிதாக இருக்கும்.

மரங்கள் மற்றும் புதர்களில் மறைந்திருந்து, தொலைவிலுள்ள சிறு பறவைகளைத் துல்லியமாகக் கண்டறிந்து திடீரெனப் பாய்ந்து வேட்டையாடும் திறன் கொண்ட இப்பறவைகளின் வருகை, சூழலியல் ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்