தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துணைவேந்தர்களை மிரட்டிய தமிழக காவல்துறை: ஆளுநர் குற்றச்சாட்டு

2 mins read
dff2d0a2-eb16-4ea6-bf00-44c188e7dfae
ஆளுநர் ஆர்.என்.ரவி. - படம்: ஊடகம்

சென்னை: தமிழகக் காவல்துறை மிரட்டியதால்தான் ஊட்டியில் நடைபெறும் மாநாட்டில் துணை வேந்தர்கள் பங்கேற்க இயலவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் வலுத்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது.

இதில் துணை அதிபர் ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். எனினும், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் பெரும்பாலான துணை வேந்தர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் காவல்துறையால் மிரட்டப்பட்டதாகக் கூறினார்.

“மாநாட்டில் பங்கேற்க மாநிலப் பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் சிலர் ஊட்டி வந்தடைந்தனர். ஆனால் அவர்கள் மிரட்டப்பட்டனர்.

“மாநில அரசின் காவல்துறையினர், துணை வேந்தர்கள் தங்கியிருந்த பகுதிகளுக்குச் சென்று அறைக்கதவைத் தட்டி, ‘வீடு திரும்ப முடியாது’ என மிரட்டியுள்ளனர்.

“இந்தியாவிலேயே சிறந்து விளங்கிய தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் நிலை தற்போது கவலைக்குரியதாக உள்ளது. பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலையுள்ளது,” என்று ஆளுநர் ரவி தெரிவித்தார்.

மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள் முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் அவர்களுக்கு எதுவும் தெரிவதில்லை என்றும் ஆண்டுதோறும் 6,500 பேர் முனைவர் பட்டம் பெறுகின்றனர் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.

ஊட்டி மாநாட்டுக்கு 49 பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் பல்வேறு தனியார் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த துணைவேந்தர்கள் 32 பேர் கலந்துகொண்டனர்.

அரசு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த துணைவேந்தர்கள் பெரும்பாலானவர்கள் பங்கேற்கவில்லை. பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மட்டும் பங்கேற்றார்.

குறிப்புச் சொற்கள்