வெற்றி வீடு திட்டம்: 70,000 வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு

வெற்றி வீடு திட்டம்: 70,000 வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு

மாதிரிப் படம்: பாலிமர் நியூஸ்

06 Nov 2026 - 3:44 pm

2 mins read

சென்னை: தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்குச் சொந்த வீடு வழங்கும் நோக்கில், 2026-27ஆம் நிதியாண்டில் 70,000 கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்காக ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அதிகாரபூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது.

தமிழக முதல்வர் அறிவித்துள்ள ‘வெற்றித் தமிழகம்’ தொலைநோக்குத் திட்டத்தின்கீழ், கிராமப்புறங்களில் நலிவடைந்த மக்களுக்கு மொத்தம் ஐந்து லட்சம் புதிய வீடுகள் கட்டித்தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாகவே இந்த ‘வெற்றி வீடு திட்டம்’ தற்போது நடைமுறைக்கு வருகிறது.

இத்திட்டத்தின் சிறப்பம்சமாக, தகுதிபெறும் ஒவ்வொரு பயனாளிக்கும் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். பயனாளிகள் குறைந்தபட்சம் 360 சதுர அடி முதல் அதிகபட்சம் 500 சதுர அடி பரப்பளவில் சமையலறையுடன் கூடிய கான்கிரீட் கூரை வீடுகளைக் கட்டிக் கொள்ளலாம்.

முன்னுரிமை மற்றும் தேர்வு முறை

குடிசை வீடுகள், மண் சுவர்கள், உறுதியற்ற கூரைகளைக் கொண்ட வீடுகளில் வசிப்போருக்கு இத்திட்டத்தில் முதன்மை முன்னுரிமை அளிக்கப்படும். பயனாளிகளைத் தேர்வுசெய்ய ஊரகப் பகுதிகளில் கைப்பேசி செயலி மூலம் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

தயாரிக்கப்படும் முதற்கட்டப் பட்டியல் கிராம ஊராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, வெளிப்படையான முறையில் இறுதிப்பட்டியல் அரசு இணையதளத்தில் வெளியிடப்படும். இருப்பினும், முதற்கட்ட 70,000 வீடுகளுக்கு ஏற்கெனவே ஊரக வளர்ச்சித் துறையிடம் உள்ள வீடற்றோர் பட்டியலில் இருந்தும் பயனாளிகளைத் தேர்வுசெய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கூடுதல் கடன் வசதி

கூடுதல் நிதி தேவைப்படும் பயனாளிகளுக்கு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் ரூ.50,000 வரை ஆறு விழுக்காடு வட்டியில் கடன் வழங்கப்படும்.

மேலும், கூட்டுறவு அல்லது வணிக வங்கிகள் வாயிலாக ஒரு லட்சம் ரூபாய் வரை வீட்டுக் கடனும் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கடன்களுக்கு ஆண்டுக்கு மூன்று விழுக்காடு வட்டி மானியத்தை 15 ஆண்டுகள் வரை அரசே ஏற்கும். தனிநபர் கழிப்பறை இல்லாத வீடுகளுக்குத் தூய்மை இந்தியா இயக்கம் மூலம் ரூ.12,000 செலவில் கழிப்பறை கட்டிக் கொடுக்கப்படும்.

ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.3,500 கோடியில் மாநில அரசின் நிதியாக ரூ.2,600 கோடியும் மாநில நிதிக்குழு மானியத்தில் இருந்து ரூ.900 கோடியும் பயன்படுத்தப்படும். இத்திட்டத்தின்கீழ் வீடுகள் தரமாகவும் வரையறுக்கப்பட்ட காலத்திற்குள்ளும் கட்டி முடிக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்