தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரசாந்த் கிஷோருடன் தவெக கட்சியினர் தீவிர ஆலோசனை

2 mins read
f6e351a7-7dc4-4314-9b0d-8363930dc007
பிரபல தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர். - படம்: இந்திய ஊடகம்

சென்னை: நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதல் மாநாடு கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது.

இந்த மாநாட்டைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் செயல்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

மேலும் திரு விஜய் அடிக்கடி ஆலோசனை கூட்டங்களை நடத்தி, புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து வருகிறார்.

அண்மையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் பொறுப்பை வழங்கியுள்ளார் விஜய்.

இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டில், பிரபல தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் திங்கட்கிழமை (பிப்ரவரி 10) திடீரென சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு பிற்பகல் 3 மணி முதல் மாலை 5.30 வரை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இச்சந்திப்பில் தமிழக அரசியல் நிலவரம், தேர்தலில் வெற்றி பெறுவதற்கு என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், எந்தெந்த கட்சிகளை அரவணைத்து செல்ல வேண்டும், பிரசார உத்திகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பிரசாந்த் கிஷோர் விவரித்ததாக தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

விஜய், பிரசாந்த் கிஷோர் சந்திப்பின்போது தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர்கள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் இருந்ததாக கூறப்படுகிறது.

விஜய் உடனான பிரசாந்த் கிஷோரின் சந்திப்பை ஆதவ் அர்ஜுனா ஏற்பாடு செய்ததாக நம்பப்படுகிறது.

இந்நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சி நிர்வாகிகளுடன் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் 2ம் நாளாக செவ்வாய்க்கிழமையும் (பிப்ரவரி 11) ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்புச் சொற்கள்