சுமுகமாகப் பிரிய விஜய், சங்கீதா முடிவு

சுமுகமாகப் பிரிய விஜய், சங்கீதா முடிவு

2 mins read
7a9d9c9e-4e8a-4994-adc9-1f127e99f899
திருச்சியில் புனித அந்தோணியார் தேவாலயத்துக்குச் சென்று தரையில் முட்டிபோட்டபடி சிறிது தூரம் சென்று ஜெபம் செய்தார் விஜய். - படம்: நியூஸ் 9

சென்னை: தவெக தலைவர் விஜய்யும் அவரது மனைவி சங்கீதாவும் சுமுகமாகப் பிரிவது என முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் சங்கீதா தொடுத்திருந்த விவாகரத்து மனு மீதான விசாரணை திங்கட்கிழமை (ஏப்ரல் 20) நடைபெற்றது. எனினும், நீதிமன்ற அழைப்பாணைக்கேற்ப இருவரும் நேரில் முன்னிலையாகவில்லை.

இந்நிலையில், இருதரப்பு வழக்கறிஞர்களும் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அப்போது இருவரும் சுமுகமாகப் பிரிவது என முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது.

சங்கீதா கோரியபடி, வாழ்நாள் ஜீவனாம்சம் வழங்க விஜய் ஒப்புக்கொண்டுள்ளார் என்றும் குழந்தைகளின் எதிர்காலம் கருதி சொத்து பாகப்பிரிவினைகள் குறித்து உடன்பாடு காணப்பட்டுள்ளது என்றும் ஊடகச்செய்தி தெரிவிக்கிறது.

இது தொடர்பாக விஜய், சங்கீதா ஆகிய இருவரது சார்பிலும் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், இருவரும் கலந்து பேசி சுமுகமாகப் பிரிவது என முடிவு செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையைத் தள்ளி வைத்துள்ளார்.

மேலும், தேர்தல் பணிகள், பாதுகாப்பு காரணங்களால் இருவரும் நேரில் முன்னிலையாகவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

விஜய்யின் மும்மத வழிபாடு

இதனிடையே, திருச்சியில் பிரசாரம் மேற்கொண்ட விஜய், தனது பிரசாரத்தின்போது இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களில் வழிபாடு செய்து வாக்குச் சேகரித்தார்.

கொட்டப்பட்டு பகுதி அருகே உள்ள ஸ்ரீ பச்சநாச்சியம்மன் கோயிலில் தரையில் படுத்து சாமி கும்பிட்ட விஜய்க்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூ, பழம், விபூதி, குங்குமம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

அடுத்து கே.கே.நகர்ப் பகுதியில் உள்ள நூருல் ஹுதா பள்ளிவாசலுக்குச் சென்று அதன் தலைவரைச் சந்தித்து, திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் தனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டு வாக்கு சேகரித்தார்.

மேலும், புனித அந்தோணியார் தேவாலயத்துக்குச் சென்று தரையில் முட்டிபோட்டபடி சிறிது தூரம் சென்று ஜெபம் செய்தார்.

குறிப்புச் சொற்கள்