ஐந்து தொகுதிகளில் விஜய் பிரசாரம்

ஐந்து தொகுதிகளில் விஜய் பிரசாரம்

2 mins read
13e5d237-885e-40bc-874d-a7a4d65b7af9
தவெக தலைவர் விஜய். - படம்: தினமணி

சென்னை: தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியை மையமாகக் கொண்டு தமது முதற்கட்ட பிரசாரத்தைத் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பிரசாரத்தை முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றன.

குறிப்பாக, இந்தத் தேர்தலில் புதிய கட்சியாகக் களம் காணும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரம்பூரில் முதன்முதலாக பிரசாரத்தைத் தொடங்கும் விஜய் அன்று மட்டும் ஐந்து இடங்களில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், அந்தக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.

இருப்பினும், அக்கட்சித் தலைவர் விஜய் வடசென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதியிலிருந்து போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. பெரம்பூர் தொகுதி அரசியல் ரீதியாக முக்கியமான பகுதியாக கருதப்படுவதால், அங்கு விஜய் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மார்ச் 27-ஆம் தேதி மாமல்லபுரத்தில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் வேட்பாளர்கள் மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டு, தவெக தலைவர் விஜய் முக்கிய உரையாற்ற உள்ளதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்தக் கூட்டம் தவெகவுக்கு முக்கிய தொடக்க நிகழ்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, தேர்தல் பிரசாரத்தை சனிக்கிழமை (மார்ச் 28) தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அதன்படி, பெரம்பூர் தொகுதியை மையமாகக் கொண்டு தனது முதற்கட்டப் பிரசாரத்தைத் தொடங்க உள்ளார்.

பெரம்பூர் தொகுதியுடன், வடசென்னையின் முக்கிய தொகுதிகளான கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் விஜய் நேரடியாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த ஐந்து தொகுதிகளிலும் நடைபெறும் பிரசாரக் கூட்டங்களில் ஒவ்வோர் இடத்திலும் 3 ஆயிரம் பேர் வரை பங்கேற்பார்கள் என தமிழக வெற்றிக் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்