சென்னை: தமிழகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரி, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மின்னஞ்சல் மூலம் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ள நிலையில், புது சர்ச்சையும் வெடித்துள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைக்க தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. தற்போதைய சூழலில் தொங்கு சட்டமன்றமே நிலவுகிறது.
இந்நிலையில், சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு மின்னஞ்சல் மூலம் ஆட்சியமைக்க உரிமை கோரும் கடிதத்தை விஜய் அனுப்பியுள்ளது நவீன அரசியல் நகர்வாகக் கருதப்படுகிறது.
அவர் தமது கடிதத்தில், தமிழகத்தின் நலன் கருதி, நிலையான ஆட்சியை வழங்கத் தவெக தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார் என ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
234 இடங்களைக் கொண்ட தமிழக சட்டமன்றத்தில், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை. ஆனால், எந்தக் கட்சிக்கும் அவ்வளவு இடங்கள் கிடைக்கவில்லை.
தவெக கட்சியாலும்கூட மேலும் பத்துக்கும் அதிகமான எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தால்தான் ஆட்சி அமைக்க முடியும்.
எந்தக் கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் பெரும்பான்மை இல்லை என்பதே தற்போதைய சூழல்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், ஆளுநர் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிக இடங்களைப் பெற்ற கட்சியின் தலைவரையோ அல்லது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு பெற்றவரையோ ஆட்சி அமைக்க அழைக்கலாம்.
இந்த அடிப்படையில்தான், தனிப்பெரும்பான்மை பெறவில்லை என்றாலும், தார்மீக அடிப்படையில், பிற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறும் நோக்கத்தில் விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரியதாகக் கருதப்படுகிறது.
தனது கடிதத்தில், சட்டமன்றத்தில் தனது அரசுக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபிக்க இரண்டுவார காலம் அவகாசம் கோரியுள்ளார் விஜய் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெறுவது, மாற்று அரசியல் சக்திகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் குறைந்தபட்ச பொதுத் திட்டத்தை உருவாக்கி அதன்மூலம் ஆதரவைத் திரட்டவும் விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மற்ற பெரிய கட்சிகளின் நிலைப்பாட்டையும் சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளையும் கேட்டறிந்த பின்னர், தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

